தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு..!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் காரணமாக ஐந்து நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வரும் 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் மாலை அல்லது இரவு நேரங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.





