தமிழகத்தில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!
சென்னையில் இரண்டாவது நாளாக மழை பெய்த நிலையில் 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் காலையில் வெயில் அடித்த நிலையில் மாலையில் திடீரென நிலை மாறி கருமேகங்கள் சூழ்ந்து இரவு போன்று காணப்பட்டது.
பின்னர் சற்று நேரத்தில் நகரின் பல்வேறு இடங்களிலும் பலத்த காற்றுடன் மழை கொட்டத் தொடங்கியது. திருவல்லிக்கேணி, மீனம்பாக்கம், கிண்டி, பாரிமுனை, மயிலாப்பூர், எழும்பூர், போரூர், வடபழனி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது.
அதைப்போல புறநகர் பகுதிகளான பல்லாவரம், குரோம்பேட்டை, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்தது. ஊரடங்கால் வெறிச்சோடி காணப்பட்ட சாலைகள் சிலவற்றில் மழைநீர் தேங்கியது. காஞ்சிபுரத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் பல்வேறு இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
விழுப்புரம் பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் சேதமடைந்தன. பெரிய அளவில் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அரசு நிவாரணம் வழங்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






