--- --:--:-- --

நடிகர்கள் விமல், சூரி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

9

கொடைக்கானல் பேரிஜம் ஏரியில் அத்துமீறி நுழைந்தது குறித்து நடிகர்கள் விமல் மற்றும் சூரி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிந்துள்ளனர். பொது முடக்கத்தால் தமிழக மக்கள் பொருமி கொண்டிருக்க அனுமதியின்றி நடிகர்கள் விமலும், சூரியும் கொடைக்கானல் பேரிஜம் ஏரி க்கு சென்று குதூகலித்த புகைப்படங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

 

ஜூலை 16ஆம் தேதி மதுரையில் இருந்து நண்பர்கள் சிலருடன் காரில் புறப்பட்ட விமலும், சூரியும் நிலக்கோட்டை, வத்தலக்குண்டு வழியாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்நுழைந்து இருக்கின்றனர். இ பாஸ் இல்லாமல் அவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணித்தது எப்படி என்பது புரியாத புதிர்.

 

அதுமட்டுமின்றி சுமார் ஐந்து சோதனைச் சாவடிகளை கடந்து கொடைக்கானல் சென்று சேர்ந்ததும் அதிசயம்தான். மேலும், கொடைக்கானலில் இருந்து 28 கிலோ மீட்டர் வனத்துக்குள் பயணித்து பேரிஜம் ஏரி சென்றுள்ளனர். கொடைக்கானலில் இருந்து பேரிஜம் ஏரி செல்லும் வழியில் வனத்துறையின் 3 சோதனைச் சாவடிகள் இருக்கின்றன.

 

தற்போது பொது முடக்கத்தால் அவை மூடப்பட்டிருக்கும் நிலையில் விமலும் சூரியும் பேரிஜம் ஏரிக்கு சென்றது எப்படி என தெரியவில்லை. அனுமதியின்றி உள்ளே நுழைந்த விமல் சூரி மற்றும் நண்பர்கள் பேரிஜம் ஏரியில் மீன் பிடித்து அங்கேயே சமைத்து சாப்பிட்டுள்ளனர். ஏரியில் இருக்கும் வனத்துறை கெஸ்ட் ஹவுஸில் தங்கியுள்ளனர்.

 

அந்த சூழல் காவலர்கள் 3 பேர் விமல் மற்றும் சூரியை நேரில் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சூழல் காவலர்கள் முகநூலில் வெளியிட்ட தால்தான் இந்த விவகாரம் வெளியில் வந்தது. மூன்று பேரையும் பணியில் இருந்து நீக்கிய வனத்துறை விமலுக்கும், சூரிக்கும் தலா 2,000 ரூபாய் அபராதமும் விதித்தது.

 

இந்த நிலையில் விமல் மற்றும் சூரி மீது வேண்டுமென்றே தொற்றுநோய் பரப்புதல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் கொடைக்கானல் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார் யார் என்று தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. திரைப்படங்களில் மக்களுக்கு அறிவுரை கூறும் நடிகர்கள் நிஜவாழ்வில் அவற்றைப் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

Leave a Reply

Right Menu Icon