--- --:--:-- --

ஊரடங்கு நேரத்தில் சரக்கு விற்று கொண்டாட்டம்… கம்பி நீட்டிய அதிகாரியால் ஊழியர்கள் திண்டாட்டம்!!

sdgsdf

உயர் அதிகாரியை நம்பி, ஊரடங்கு காலத்தில் முறைகேடாக மதுபானம் விற்ற டாஸ்மாக் ஊழியர்கள், அவரது திடீர் டிரான்ஃபரால் கலக்கத்தில் உள்ளனர். இந்த முறைகேடு குறித்து, இராமநாதபுரம் ஆட்சியர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல், நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. கல்வி நிறுவனங்கள், கடைகள், தியேட்டர்கள், கோவில்கள், தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் உள்பட அனைத்தும் மூடப்பட்டன. அரசுக்கு பல கோடி வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் மதுக்கடைகளும், இதில் அடங்கும்.

 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 238 டாஸ்மாக் கடைகள் உட்பட, தமிழகத்தில் இருக்கும் ஏறத்தாழ 5,300 மதுக்கடைகளும் மூடப்பட்டதால், தினமும் ரூ.100 கோடி மதிப்பிலான மதுவகைகளின் விற்பனை தடைபட்டது. ஒருபுறம் வருவாய் குறைந்து அரசு தத்தளிக்க, மதுவகைகள் கிடைக்காமல் ‘குடி’மகன்களும் திண்டாடினர்.

 

இதை தொடர்ந்து, மே 7, 8ம் தேதிகளில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன; ஆனால், சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், அவை உடனே மூடப்பட்டனு. நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் இடைக்கால தடை வாங்கியதை அடுத்து, கடந்த 16ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மீண்டும் இயங்கி வருகின்றன. அதன் பிறகே, மதுப்பிரியர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்; ‘குடி’மகன்களின் வாட்டம் குறைந்து, ‘தள்ளாட்டம்’ தொடங்கியது.

 

அதே நேரம், ஊரடங்கு உத்தரவு கடுமையாக அமலில் இருந்த காலகட்டத்தில், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நேரத்தில், மது இல்லாமல் வீட்டில் மதுப்பிரியர்களால் சும்மா இருக்க முடியவில்லை. மதுபானங்கள் கிடைக்காதா என்று ஏங்கினர்; மதுவுக்கு தீவிர அடிமையான சிலர், எந்த விலை கொடுத்தாவது மதுபானம் கிடைத்தால் வாங்கிவிட துணிந்தனர்.

 

இதுபோன்ற தீவிர மது விரும்பிகளை சாதகமாக்கி, சட்டவிரோதமாக சேலம், திருச்சி, திருப்பூர், இராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் மதுவிற்பனை அமோகமாக நடந்துள்ளது. இதற்கு அதிகாரிகள் சிலர் ‘துணை’ போனதோடு, கிடைத்த கூடுதல் வருவாயை பங்கிட்டுக் கொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

 

திருச்சி பகுதியில் அதிகவிலைக்கு முறைகேடாக மதுவிற்பனை என்ற புகாரின் அடிப்படையில், திருச்சி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் துரைமுருகன், திடீரென மாற்றப்பட்டார்; அவருக்கு பதில், விருதுநகர் மாவட்ட நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் பார்த்திபன், அப்பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

 

இதேபோல், சேலம் கந்ம்பட்டி குடோனில் இருந்த மதுபாட்டில்களை, டாஸ்மாக் ஊழியர்கள் முறைகேடாக விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக கருப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் தொடர்புடைய வெள்ளக்கல்பட்டி டாஸ்மாக் கடை கூடுதல் மேற்பார்வையாளர் சண்முகசுந்தரம், விற்பனையாளர்கள் பெருமாள், கண்ணன் உள்பட 10 பேரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

ஆனால், இராமநாதபுரம் மாவட்டத்தில் நடந்த கூத்து, மற்ற எல்லாவற்றையும் விட சற்று வித்தியாசமானது. இராமநாதபுரம் நகர்புற பகுதிகளில், ஊரடங்கு அமலுக்கு வந்தபோது, நகராட்சி எல்லைக்குள் இருந்த 9 கடைகளும் மூடப்பட்டன. ஆனால், அதற்கு முன்பாகவே, அங்கு இருந்த மதுபானங்கள், டாஸ்மாக் உயர் அதிகாரி ஒருவரின் ‘ஆசி’ உடன், டாஸ்மாக் கண்காணிப்பாளர் துணையோடு, கள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

 

இந்த முறைகேட்டை கண்டும் காணாமல் இருந்ததற்காக, அந்த அதிகாரிக்கு கணிசமான தொகை வழங்கப்பட்டுவிட்டதாம்; அதன் பிறகு அவர், திருப்பூர் மாவட்டத்திற்கு மாறுதலாகி சென்று விட்டார். பாதுகாப்பு கவசமாக அந்த அதிகாரி இருக்கிறார் என்ற தைரியத்தில் மதுபானம் விற்ற தொகையை, சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கண்காணிப்பாளர்கள் அரசுக்கு செலுத்தாமல், ‘ஏப்பம்’ விட்டதாக தெரிகிறது.

 

தற்போது இராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு, அந்த 9 டாஸ்மாக் கடைகளும் நிறக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால், தொகையை எப்படி கட்டுவது; தொகையில் பங்கு வாங்கிய அதிகாரியும் திருப்பூருக்கு சென்றுவிட்டாரே என்று, அந்த டாஸ்மாக் கடைகளுக்கான மாவட்ட பொறுப்பில் உள்ள கடை கண்காணிப்பாளர் உட்பட ஊழியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

 

தைரியம் கொடுத்த அதிகாரியோ, திருப்பூருக்கு சென்றுவிட, மதுவிற்றதில் கிடைத்த தொகையை அரசுக்கு செலுத்த முடியாமலும், மதுபான சரக்கு இருப்பை கணக்கு காட்ட முடியாமலும் திண்டாடி வருகின்றனர். இதற்கிடையே, இராமநாதபுரம் நகராட்சியில் இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு புகார்கள் குறித்து, மாவட்ட ஆட்சியர் ஆய்வு நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று, கோரிக்கை வலுத்து வருகிறது.

 

திகுதிகுக்கும் திருப்பூர்!

 

திருப்பூர் மாவட்டத்தில் மாநகரம், புறநகர் பகுதிகள், பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக மதுவிற்பனை நடந்ததாக, புகார்கள் எழுந்தன. இதில், பல்லடம் மகாலட்சுமி நகர் பகுதியில் போலீசார் சிலரின் “ஆதரவுடன்’ மதுவிற்பனை ஜோராக நடந்தது. இது தெரியாத அப்பகுதி அப்பாவி நபர், இரவில் நடக்கும் மதுவிற்பனை பற்றி போலீசுக்கு தெரிவித்துள்ளார்.

 

ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே தகவல் சொன்ன நபருக்கு, சரக்கு விற்றவரிடம் இருந்து தொலைபேசியில் மிரட்டல் வந்ததாம். ‘சாமி’ ஆளை விடுங்க என்று அழாத குறையாக அந்த நபர், கப்-சிப் ஆகிவிட்டாராம். திருப்பூர் மாவட்ட முறைகேடுகளுக்கு இது ஒரு சாம்பிள் தான் என்கிறார்கள்.

 

அடுத்தடுத்த சர்ச்சைகள், புகார்களின் எதிரொலியாக, திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளராக இருந்த லூர்துசாமி மீதும் நடவடிக்கை பாய்ந்தது. கள்ளச்சந்தையில் சரக்கு விற்பனையை கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகள் காரணமாக, அவர் உடனடியாக சென்னைக்கு மாற்றப்பட்டார்.

 

அவரது இடத்திற்குதான் தற்போது, இராமநாதபுரத்தில் ஊழியர்களுக்கு தூபம் போட்டு, லாபம் பார்த்துவந்ததாக கூறப்படும் அதிகாரி மாற்றலாகி வந்துள்ளார். இராமநாதபுரத்தில் பலித்த அவரது பாட்சா, திருப்பூரில் பலன் தருமா? பயம் தருமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

இறங்கிப் போன ‘சுருதி’

 

ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்டிருந்த டாஸ்மாக் கடைகள், மே 7 மற்றும் 8ம் தேதிகளில் திறக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவால் மீண்டும் மூடப்பட்டன. அந்த இரு நாட்களில், மதுப்பிரியர்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாகத்துடன் மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.

 

இந்த இரு நாட்களில் மட்டும் சுமார் 280 கோடி ரூபாய்க்கு மதுவிற்பனை நடந்துள்ளது. அதன் பிறகு உச்சநீதிமன்ற அனுமதியுடன், மே 16ம் தேதி முதல், டாஸ்மாக் கடைகள் மீண்டும் செயல்படத் தொடங்கின. அன்று தொடங்கி, மே 24ம் தேதி வரை ரூ. 1066 கோடி மதிப்பில் மதுபானங்கள் விற்பனையானதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

 

எனினும் அதன் பிறகு, மதுபான விற்பனை ‘டல்’ அடித்தது. மதுபானம் வாங்க யாரும் வராததால், பல இடங்களில் மதுக்கடைகள் ‘குடி’மகன்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. கையில் பண இருப்பு குறைவு, மீண்டும் பணியில் கவனம் செலுத்துதல் போன்ற காரணங்களால் தான், டாஸ்மாக் மது விற்பனை மந்தமடைந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Right Menu Icon