சிபிஎம் திருப்பூர் மாவட்டச் செயலாளராக சி.மூர்த்தி தேர்வு..!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக சி.மூர்த்தி (வயது 60) ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கூட்டம் தியாகி பழனிசாமி நிலையத்தில் வியாழக்கிழமை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஜெயபால் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.சுகுமாறன், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ் உள்பட மாவட்ட செயற்குழு, மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் மாநில செயற்குழு உறுப்பினராக பொறுப்புகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக, அவர் திருப்பூர் மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து விடுபட்டார்.
இதையடுத்து கட்சியின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக சி.மூர்த்தி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார். அத்துடன் மாவட்ட செயற்குழு உறுப்பினராக கி.கனகராஜ் மற்றும் மாவட்டக்குழு உறுப்பினராக எஸ்.பிரவீன் குமார் ஆகியோர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்





