--- --:--:-- --

நகைகளுக்குப் பதிலாக தக்காளி மாலை அணிந்த மணப்பெண்

8

பாகிஸ்தானில் திருமண விழா ஒன்றில் நகைகளுக்கு பதிலாக தக்காளிகளை கொண்டு மணப்பெண் அலங்கரிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

திருமண விழாவில் மணமக்கள் ஆடை, அணிகலன்களை ரசிப்பதற்கு நம்மூரில் தனிக் கூட்டம் உண்டு. அதிலும் குறிப்பாக மணப்பெண்ணின் சிகை அலங்காரத்தையும் தங்க வைர அணிகலன்களும் பெண்கள் மத்தியில் பேசுபொருளாக மாறிவிடும்.

 

இந்த நிலையில் தனது திருமண விழா மூலம் தங்க நகைகளுக்கு பதிலாக தக்காளிகளால் ஆன ஆபரணங்களை அணிந்து உலகின் கவனத்தையே பாகிஸ்தான் பக்கம் திருப்பியிருக்கிறார் இந்த மணப்பெண். பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவு புதிய உச்சத்தை எட்டியுள்ளது தக்காளி விலை.

 

விலையேற்றத்தை சமாளிக்க முடியாமல் திணறும் பாகிஸ்தான் அரசை விமர்சிக்கும் வகையில் திருமண விழாவில் தக்காளி ஆபரணங்களை அணிந்து கொண்டு தன்னை அலங்கரித்திருக்கிறார் மணப்பெண். இதுமட்டுமின்றி தங்கத்திற்கு ஈடாக தக்காளியில் மதிப்பை பறைசாற்றும் வகையில் இந்த மணப்பெண்ணுக்கு மூன்று கூடை தக்காளிகளையும் அவரது பெற்றோர் பரிசாக அளித்துள்ளனர்.

 

பாகிஸ்தானின் தக்காளி கிலோ ஒன்றுக்கு ஏறத்தாழ 300 ரூபாய்க்கு விற்பனை ஆவதால் அந்நாட்டு மக்கள் கடுமையாக அவதி அடைந்துள்ளனர். இந்தியா, ஆப்கானிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அரசு அண்மையில் தடை விதித்தது.

 

இந்த நடவடிக்கையை தக்காளிகளின் விலை ஏற்றத்திற்கு பிரதான காரணம் என கூறப்படுகிறது. இது ஒருபுறமிருக்க விளை நிலங்களில் உள்ள தக்காளி கொள்ளையடிக்கப்பட்டு அதுவும் சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி திருடர்களை சமாளிக்க பிரத்தியேகமாக காவலாளிகளை விவசாயிகள் நியமித்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon