திரிந்த பாலும், திரிந்த மோரும் சேர்ந்தா தயிராகுமா..? முட்டையும் முட்டையும் சேர்ந்தா முட்டை தான்..!! ரஜினி – கமல் இணைப்பு குறித்து அமைச்சர்கள் கமெண்ட்!!
திரிந்த பாலும், திரிந்த மோரும் சேர்ந்தால் எப்படி தயாராக முடியாதோ, அதுபோல ரஜினியும் கமலும் சேர்ந்தாலும் எதுவும் நடக்கப் போவது இல்லை என அதிமுக அமைச்சர் ஓ.எஸ்.மணியன் விமர்சித்துள்ளார்.
தமிழக மக்களின் நன்மைக்காக, அவசியம் ஏற்பட்டால் நாங்கள் இருவரும் ஒன்றிணைவோம் என நடிகர்கள் கமலும், ரஜினியும் ஒரே நாளில், ஒரே மாதிரி கருத்து கூறியிருப்பது தமிழக அரசியலில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இருவரும் ஒன்று சேர்ந்தால் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படலாம் என்றும் பல்வேறு தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர்.
ஆனால், ஆளும் அதிமுக தரப்பிலோ அமைச்சர்கள் பலரும் இதனை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல், ரஜினி, கமல் பற்றி கிண்டலாக விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து அமைச்சர் ஓ.எஸ்.மணியன் கூறுகையில், திரிந்த பாலும், திரிந்த மோரும் ஒன்று சேர்ந்தால் தயாராக முடியாது. அது போலத்தான் ரஜினியும் கமலும் ஒன்று சேர்ந்தாலும் ஒன்றும் அதிசயம் நடக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார்.

வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமாரோ, முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான் கிடைக்கும்.ஒன்றும் ஒன்றும் சேர்ந்தால் தான் இரண்டு (1+1=2). முட்டையும் முட்டையும் சேர்ந்தால் முட்டை தான்(0 +0 = 0 ) கிடைக்கும் என்று கூறிய அமைச்சர் உதயகுமார், இதனை இந்த மொட்டை சொல்கிறேன் எனக் கூறி தனது மொட்டையடித்த தலையைக் காண்பித்து ஜோக்கடித்தார்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியோ, தனது பாணியில், அதெப்படி?ரஜினியும் கமலும் சேர்ந்தால் போதுமா? அவர்களது ரசிகர்கள் ஒன்று சேர்வார்களா? அவர்களுக்குள் ஏகப்பட்ட பிரச்னை இருக்கு ? என்று இருவரின் ரசிகர்களிடையே முடிச்சுப் போட்டுள்ளார்.
அதிமுக ஒருங்கிணைப்பாளரும்துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வமோ, இருவரும் சேர்வதால் அதிமுகவுக்கு எந்தப் பாதிப்பும் வரப்போவதில்லை என அலட்டிக் கொள்ளாமல் கூறியுள்ளார்.






