பாஜக வேட்பாளர்கள் பட்டியல்… தாராபுரத்தில் முருகன் போட்டி; அண்ணாமலை, குஷ்பு, வானதிக்கு வாய்ப்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், 6 தொகுதிகளில் களமிறங்கும் பாரதிய ஜனதா கட்சியின் முதல்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகி இருக்கிறது.
வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டசபைத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. இக்கட்சிக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கி இருக்கிறது.
அதன்படி, திருவண்ணாமலை, நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு, ராமநாதபுரம், மொடக்குறிச்சி, துறைமுகம், ஆயிரம் விளக்கு, திருக்கோவிலூர், திட்டக்குடி (தனி), கோவை தெற்கு, விருதுநகர், அரவக்குறிச்சி, திருவையாறு, உதகமண்டலம், திருநெல்வேலி, தளி, காரைக்குடி, தாராபுரம் (தனி), மதுரை வடக்கு ஆகிய 20 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
இதற்கிடையே, வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது; இது வரும் 19ம் தேதி நிறைவடைகிறது. நாளை சுபமுகூர்த்த தினத்தில் மனு தாக்கல் செய்ய, பலரும் விரும்புகின்றனர். எனினும் பாஜக வேட்பாளர்கள் விவரம் வெளியாகாமல் இருந்து வந்தது.
பாஜக சார்பில் நெல்லையில் போட்டியிட மனு செய்திருந்த நயினார் நாகேந்திரன், வேட்புமனு அளித்தார். பாஜக அதிகாரபூர்வமாக வேட்பாளர் பட்டியலை வெளியிடாத சூழலில், கட்சியின் அங்கீகாரக் கடிதத்தை பி படிவத்துடன் இணைக்காமல் அவர் மனுத் தாக்கல் செய்தார். இது, அக்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த சூழ்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சியின் 6 வேட்பாளர் பட்டியல் இன்று அதிகாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது. இந்தப் பட்டியலை பாஜக தேசியப் பொதுச் செயலாளர் அருண் சிங், டெல்லியில் இன்று வெளியிட்டார்.
அதன்படி, திருப்பூர் மாவட்ட தாராபுரம் (தனி) தொகுதியில், பாஜக மாநிலத்தலைவர் எல் முருகன் போட்டியிடுகிறார். அரவக்குறிச்சியில் அண்ணாமலை ஐபிஎஸ், ஆயிரம் விளக்கில் நடிகை குஷ்பு, காரைக்குடியில் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா, கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசன், நாகர்கோவில் – எம்.ஆர். காந்தி ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர். திமுகவில் இருந்து விலகி இன்று பா.ஜ.க.வில் சேர்ந்த மருத்துவர் சரவணனுக்கு மதுரை தெற்கு தொகுதியில் வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
வேட்பாளர்கள் விவரம் வருமாறு:
திருவண்ணாமலை- தணிகைவேல்
நாகர்கோவில்- எம்.ஆர்.காந்தி
குளச்சல் – ரமேஷ்
ராமநாதபுரம் – குப்புராம்
மொடக்குறிச்சி- சி.கே.சரஸ்வதி
துறைமுகம் – வினோஜ் பி செல்வம்
ஆயிரம் விளக்கு – குஷ்பு
திருக்கோவிலூர் – கலிவரதன்
திட்டக்குடி (தனி)- பெரியசாமி
கோவை தெற்கு- வானதி சீனிவாசன்
விருதுநகர் – பாண்டுரங்கன்
அரவக்குறிச்சி – அண்ணாமலை,
திருவையாறு – பூண்டி எஸ்.வெங்கடேசன்
திருநெல்வேலி – நயினார் நாகேந்திரன்
காரைக்குடி – ஹெச்.ராஜா
தாராபுரம் (தனி) – எல்.முருகன்
மதுரை வடக்கு – சரவணன்





