--- --:--:-- --

திரும்பிய பக்கமெல்லாம் படைவீரர்கள்: பாதுகாப்பு வளையத்திற்குள் அயோத்தி

ayodhya

அயோத்தி வழக்கில் விரைவில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை அறிவிக்க உள்ள நிலையில், அங்கு வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் மற்றும் பாபர் மசூதி அமைந்திருந்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தமானது என்பதில் பிரச்சனை எழுந்தது.

 

இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், இந்நிலத்தை சன்னி வக்பு வாரியம், நிர்மோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகியன, சரிசமமாக பிரித்துக்கொள்ள வேண்டும் என்று 2010இல் தீர்ப்பு வழங்கியது.

 

இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 14 பேர் மேல்முறையீடு மனுக்கள் உள்ளன. இவ்வழக்கில், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையில் 5 பேரை கொண்ட அரசியல் சாசன அமர்வு தொடர்ந்து, 40 நாள் விசாரணை நடத்தியது.

 

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், வரும் 17இல் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன்பாக அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாக உள்ளது. இந்த தீர்ப்பு, நாடு முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

 

முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தியதோடு, மாநில அரசுகளையும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தி இருக்கிறது. அதேபோல், சர்ச்சைக்குரிய பகுதி அமைந்துள்ள அயோத்தியில், பாதுகாப்பு பணிக்காக 4 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

 

அயோத்தி, தற்போது பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அங்கு, திரும்பிய பக்கமெல்லாம் பாதுகாப்பு படையினரே கண்ணில் தென்படுகின்றனர். சர்ச்சைக்குரிய நிலத்தின் அருகே வசித்து வரும் மக்கள், இப்போதே அத்தியாவசிய பொருட்களை வாங்கி சேகரித்து வருகின்றனர்.

 

எனினும், வதந்திகளை பரப்பவோ, பதற்றத்தை ஏற்படுத்தவோ கூடாது என மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.

Leave a Reply

Right Menu Icon