மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் ஆட்டோவில் வந்தவர் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி !!!
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் மாதம் கந்து வட்டி பிரச்சனை காரணமாக ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 பேர் ஆட்சியர் அலுவலகத்தில் தீ குளிக்க முயன்றனர்.இதனை கண்ட பொதுமக்கள்,பத்திரிகையாளர்கள், பொதுமக்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்தனர்.எனினும்,பலத்த தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தனர்.இதனை தொடர்ந்து மக்கள் குறை தீர்ப்பு நாளன்று காவல் துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னரே மனு அளிக்க அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.இதில் மனு அளிக்க ஏராளமானோர் வந்திருந்தனர்.மதியம் சுமார் 12.30 மணி அளவில் ஆட்டோவில் குழந்தைகளுடன் வந்த சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த வினோத் குமார் என்பவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.இதனை தொடர்ந்து பாதுகாப்பு பணியில் இருந்த போலிசார் அவரை விரட்டி பிடித்தனர்.உடல் முழுவதும் மண்ணெண்ணெய் ஊற்றி இருந்த நிலையில் அவர் மீது தண்ணீர் ஊற்றியும் அவரது உடலை துணியால் துடைத்த போலீசார் அவரை மீட்டு விசாரணைக்கு பந்தய சாலை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

தந்தை தீக்குளிக்க முயன்றதை கண்ட வினோத் குமாரின் குழந்தைகள் கதறி அழுதனர்.அவர்களை பெண் காவலர்கள் பத்திரமாக அழைத்து சென்றனர்.இந்த சம்பவத்தால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.வியாபார நஷ்டம் காரணமாகவும், நண்பர்கள் துரோகம் செய்த காரணத்தால் மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாகவும்,தான் இறந்த பிறகு குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்க வேண்டும்,தன்னை புதைத்த இடத்தில் பூச்செடி நட வேண்டும்,தன்னை ஏமாற்றியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான ஆதாரங்கள் தனது செல்போனில் இருப்பதாக கடிதத்தில் இருந்தது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
வினோத் குமார் தீக்குளிக்க முயன்றதை பணியில் இருந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் பாலாஜி தடுத்து நிறுத்தி அவரை காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது.





