அன்புமணிக்கு ஆப்பு.. அதிகாரங்களை கையில் எடுத்த ராமதாஸ்.. பாமக பொதுக்குழுவில் அதிரடி தீர்மானங்கள்..!
ராமதாஸ் தலைமையில் நடந்து முடிந்துள்ள பாமக பொதுக்குழுவில் அன்புமணியின் அதிகாரம் பறிப்பு, அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளிட்ட அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. பாமகவில் இனி எந்த முடிவையும் எடுக்கும் முழு அதிகாரம் அதன் நிறுவனரான ராமதாஸுகு வழங்கி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அன்புமணி தரப்புக்கு ராமதாஸ் ஆப்பு அடித்த நிலையில், உண்மையான பாமக எது என்ற குழப்பத்தில் தொண்டர்கள் உள்ளனர்.
பாமக நிறுவனர் ராமதாஸுக்கும், அவரது மகனும் பாமக தலைவருமான அன்புமணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. நாளடைவில் இது அதிகார மோதலாக வலுவடைந்தது. இரு தரப்பினரும் மாறிமாறி குற்றம்சாட்டி வந்த நிலையில் ஒரு கட்டத்தில், அன்புமணியை பாமக தலைவர் பொறுப்பில் இருந்து நீக்குவதாக ராமதாஸ் அதிரடியாக அறிவித்தார். அன்புமணி இனி செயல் தலைவர் மட்டும்தான், கட்சியின் நிறுவனரும் தலைவரும் இனிமேல் நான் தான் என்றும் கூறினார்.
இதன் பின்னர், பாமகவில் இருந்து சிலரை ராமதாஸ் நீக்கினார். இவ்வாறு ராமதாஸால் நீக்கப்பட்ட நிர்வாகிகளை அன்புமணி வாரி அணைத்துக் கொண்டு, கட்சியில் சேர்ப்பதாக அறிவித்தார். இப்படி இருவரும் மாறி மாறி அறிவிப்பு வெளியிட்டு வருவதால் பாமகவினர் மத்தியில் பரபரப்பும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
அன்புமணி தலைமையில் ஒரு அணி, பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணி என்று இரு தரப்பும் பிரிந்து தனித்தனியே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில்தான், பாமக பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17இல் நடைபெறும் என்று முதலில் ராமதாஸ் அறிவித்திருந்தார். இதற்கு போட்டியாக, ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு நடைபெறும் என்று அன்புமணி தரப்பு அதிரடியாக அறிவித்தது.
அதன்படி, கடந்த 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் அடுத்த ஓராண்டுக்கு தலைவர் பதவியில் அன்புமணி நீடிப்பார் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று ராமதாஸ் அறிவித்தார். இது சட்டவிரோதம் என அறிவிக்கக்கோரி, நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு போட்டுள்ளது.
இந்த பரபரப்பான சூழலில், ராமதாஸ் தலைமையிலான பாமக அணியின் சிறப்பு பொதுக்குழு கூட்டம், புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான பட்டானூரில் உள்ள சங்கமித்ரா திருமண மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு தொடங்கியது. மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இந்த கூட்டத்தில், முதல்முறையாக தனது மகள் காந்திமதியை மேடை ஏற்றினார் ராமதாஸ்.
அவரது இருக்கைக்கு அருகாமையில் காந்திமதிக்கு இருக்கை போடப்பட்டு அமரவைக்கப்பட்டார். இந்த பொதுக்குழுவில் 300-க்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், 200-க்கும் மேற்பட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட செயலாளர், தலைவர் என 4 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
ராமதாஸின் சிறப்பு பொதுக்குழுவில் 37 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன. முக்கியமாக பாமகவில் புதிய விதி 35 உருவாக்கம் செய்யப்பட்டு, அதன்மூலம் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி தேர்தல்களில் தனியாகவோ, கூட்டணி அமைத்தோ போட்டியிடுவதற்கு தேவையான முடிவுகளை எடுக்கும் அதிகாரம் டாக்டர் ராமதாசிற்கு மட்டுமே அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, இனி தேர்தல் படிவங்களில் கையெழுத்திடும் அதிகாரம் டாக்டர் ராமதாசிற்கு மட்டுமே இருக்கும்.
பாமக கட்சியின் நிறுவனராகவும் தலைவராக ராமதாஸ் செயல்படுவார் என பொதுக்குழுவில் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அப்போது, பொதுக்குழுவில் இருந்தவர்களின் விசில் சத்தம், கரகோஷங்கள் மண்டபத்தை அதிரவைத்தன. தீர்மானங்களை ஜி.கே. மணி மேடையில் வாசித்தார்.
இதன் பின்னர் ராமதாஸ் பேசும்போது, “இங்கு நிறைவேற்றப்பட்ட 37 தீர்மானங்கள் ஒரு சமுதாயத்திற்கானது மட்டுமல்ல. அது தமிழ்நாட்டின் அனைத்து சமுகத்திற்கானதும் ஆகும். எப்போதும் எங்களது தீர்மானங்கள் அப்படி தான் இருக்கும்.
தமிழ்நாட்டின் அனைத்து பிரச்னைக்கும் நான் குரல் கொடுத்திருக்கேன். எல்லா மக்களுக்கும் நான் பாடுபட்டு கொண்டிருக்கிறேன். அதிமுக ஆட்சியில் 10.5 சதவிகிதம் ஒதுக்கீடு, திமுக ஆட்சியில் பெற்ற 20 விழுக்காடு ஒதுக்கீடு ஆகியவற்றை பெற்றுத் தந்ததற்கு எனக்கு நீங்கள் சென்னையில் பாராட்டு விழா நடத்தியிருக்க வேண்டும். ஆனால், என்னிடம் வருவதற்கு பதிலாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றிருக்கிறீர்கள். நான் உங்களுக்காகவும் தான் போராடி வருகிறேன்.
வரும் தேர்தலில் நாம் எந்தக் கூட்டணி? என்கிற ஆவல் உங்கள் எல்லோருக்கும் இருக்கிறது. கூட்டணி முடிவு எடுக்கும் அதிகாரத்தை எனக்கு கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் விரும்புகிறவாறு கூட்டணி சிறப்பாக அமைக்கப்படும்” என்று சஸ்பென்ஸ் வைத்து பேச்சை ராமதாஸ் நிறைவு செய்தார்.
இந்த மாநாட்டில் பாமக கௌரவத் தலைவர் ஜிகே மணி பேசுகையில், “வரும் 2026 சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெறும் வகையில் ஊக்கத்துடன் செயல் பட்டு கட்சியை பலப்படுத்த கட்சி அமைப்பு விதி 13 திருத்தங்களின் படி நிர்வாக குழு மற்றும் செயற்குழு முடிவுகளின் படி 30.5.2025 முதல் கட்சியின் தலைவராக மருத்துவர் ராமதாஸ் செயல்பட்டு வருகிறார்.
மருத்துவர் ராமதாஸ் பாமகவின் நிறுவனர் மற்றும் தலைவராக செயல்படுவார் என்பதை 17.8.2025 மாநில சிறப்பு பொதுக்குழு ஒரு மனதாக அங்கீகரிக்கிறது. ராமதாஸ் இப்பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார் என்று பொதுக்குழு உறுதி செய்கிறது” என தெரிவித்தார்.
இந்த அறிவிப்பின் மூலம், இதுவரை பாமக தலைவராக இருந்த அன்புமணியின் அதிகாரத்தை ராமதாஸ் தரப்பு பறித்துள்ளது. மேலும், அன்புமணி நியமனம் செய்த நிர்வாகிகளின் பதவிகள் செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அன்புமணி தரப்பில் நடந்த கூட்டத்தில் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டதாக கூறப்பட்ட நிலையில், ராமதாஸ் தரப்பும் பொதுக்குழு, செயற்குழு நிர்வாகிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டது.
அன்புமணி தரப்பு பொதுக்குழுவில் நிர்வாகிகளின் வருகை வீடியோ பதிவு எடுக்கப்பட்டதோடு, ஒவ்வொருவரின் வருகையும் ஆவணப்படுத்தப்பட்டதாகச் சொல்கிறார்கள். நாளையே நீதிமன்றத்தில் வழக்கு, தேர்தல் ஆணையத்தில் முறையீடு என்று வந்தால் அப்போது வாதங்களை முன்வைக்க, இதெல்லாம் தேவைப்படும் என்று அன்புமணி தரப்பு முன்னெச்சரிக்கையாக நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால், ராமதாஸ் தரப்பில் அப்படியெல்லாம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று, இன்றைய பொதுக்குழுவில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
பாமகவில் தந்தை- மகன் இடையே நடக்கும் அதிகார யுத்தம், பொதுக்குழு கூட்டத்திற்கு பின் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னமும் மோதல் நீடிக்கிறது. இதனால், உண்மையான பாமக எது? தொண்டர்கள் பலம் யார் பக்கம் அதிகம் என்ற குழப்பம் நீடிக்கிறது. நீதிமன்ற படிகளில் வழக்கு சென்றால் மட்டுமே குழப்பங்கள் முடிவுக்கு வரும் என்று மாம்பழக் கட்சியினர் நம்புகின்றனர்.





