அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் நாளை முதல் 10 மணி வரை இயங்க முடிவு..!
அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்களும் நாளை முதல் இரவு 10 மணி வரை இயங்க அனுமதி அளித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டும், பொருளாதாரத்தை மேலும் மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டும் இந்த அனுமதி அளிக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழு கட்டுப்பாட்டுப் பகுதிகளை தவிர மற்ற பகுதிகளில் காய்கறி கடைகள், மளிகை கடைகள், உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக வளாகங்கள் இரவு 10 மணிவரை இயங்கலாம் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
ஏற்கனவே வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டுமென்று உத்தரவிட்டிருக்கும் அவர் பொது இடங்களில் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்றும் முககவசம், 6 அடி இடைவெளியில் கை கழுவுதல் போன்றவற்றை கடைபிடிக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.






