புலம்பெயர் தொழிலாளர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெற வேண்டும்!
பொது முடக்க உத்தரவை மீறியதாக புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்று அனைத்து மாநில காவல்துறைக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்து கடந்த மே மாத இறுதியில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.
இந்த வழக்கில் பல்வேறு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த பின் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி புலம்பெயர் தொழிலாளர்கள் அடுத்த 15 நாட்களுக்குள் கண்டறிந்து அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்கள் விதிமுறைகளை மீறியதாக பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்ய இலவச ஆலோசனை மையங்களை அமைத்து உதவி செய்ய வேண்டும் என்று ஏற்கனவே புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மீண்டும் தங்களது பணிக்கு திரும்ப விரும்பினால் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து தரப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அழைத்துச் செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு ரயில்கள் 24 மணி நேரமும் இயங்குவதை அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







