அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது..!
பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு, அதிமுகவின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் தொடங்கியது. சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூடியது. இந்த கூட்டத்தில் 23 தீர்மானங்கள் இன்று நிறைவேற்றப்படவுள்ளன.
கூட்டத்தில் பங்கேற்க வந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நடைபெறும் முதல் செயற்குழு, பொதுக்குழு கூட்டம் இது ஆகும்.
மேலும், பாஜகவுடனான கூட்டணி முறிவுக்கு பிறகு, முதன் முறையாக நடைபெறும் கூட்டம் என்பதால், முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் அதிமுக செயற்குழு-பொதுக்குழு கூட்டம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை இழுப்பதற்கான வியூகங்கள் வகுக்கப்படலாம் என்றும், நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி வெல்ல வேண்டும் என்ற உறுதிமொழி எடுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.





