--- --:--:-- --

அதிகாரியை மிரட்டிய புகார்… அமைச்சர் கடம்பூர் ராஜூவிற்கு முன்ஜாமீன்!

Kadambur Raaju

பணியின் போது தேர்தல் அதிகாரிகளை மிரட்டிய வழக்கில், அமைச்சர் கடம்பூர் ராஜூவுக்கு, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நிபந்தனையற்ற முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

 

வரும் 6ம் தேதி தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில், அமைச்சர் கடம்பூர் ராஜூ, கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடுகிறார். அங்கு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் களத்தில் உள்ளார். கடந்த 12ம் தேதி, ஊத்துப்பட்டிவிலக்கு என்ற இடத்தில் பிரச்சாரத்திற்கு சென்ற போது அமைச்சர் கடம்பூர் ராஜூவின் வாகனத்தையும் அவரது ஆதரவாளர்களின் வாகனத்தையும், தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட முயன்றனர்.

 

அப்போது தேர்தல் பறக்கும் படை குழுவினரை அமைச்சர் கடம்பூர் ராஜூ தரப்பில் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து, அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது நாலாட்டின்புதூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார். அந்த புகாரின் பேரில், கடம்பூர் ராஜூ மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

 

இதற்கிடையே, இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர் நீதிமன்ற கிளையில் அமைச்சர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில், கோவில்பட்டி அதிமுக வேட்பாளரான அமைச்சர் கடம்பூர் ராஜுக்கு முன்ஜாமீன் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காததால் அவருக்கு நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கப்பட்டது. அதே நேரத்தில், குற்றவியல் பிரிவு 506 கீழ் பதியப்படும்; அனைத்து வழக்குகளிலும் இதே நிலைப்பாடு பின்பற்றப்படுமா என நீதிபதிகள் அரசு தரப்பில் கேள்வி எழுப்பினர்.

Leave a Reply

Right Menu Icon