பல்லடம் தொகுதியில் ஆரவாரத்துடன் ஆனந்தன் பிரசாரம்
பல்லடம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம். ஆனந்தன், தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரித்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. பல்லடம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் நிறுத்தப்பட்டுள்ளார். அவரது பெயர் அறிவிக்கப்பட்டது முதலே, மிகுந்த உற்சாகத்துடன் களமிறங்கி பிரசாரம் செய்து வருகிறார்.
அதிமுக ஆதரவாளர்களுடன் பல்லடம் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு அளிக்கும்படி அவர் வாக்காளர்களை கேட்டுக் கொண்டார். கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் வீதிவீதியாகச் சென்று பொதுமக்களை சந்தித்து ஆனந்தன் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், தற்போது பயிர்க்கடன், நகைக்கடன் தள்ளுபடி, மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி உள்ளிட்ட அறிவிப்புகளை அதிமுக அரசு நிறைவேற்றியுள்ளது.

பெண்களுக்கு ஒளி விளக்காக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக அரசு திகழ்கிறது. தொடர்ந்து இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச்செய்தால், பெண்களுக்கு இலவச வாஷிங்மெஷின், மாதம் ரூ.1500 தொகை, ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசம், கல்லூரி மாணவர்களுக்கு 2ஜிபி இலவச டேட்டா கார்டு உள்ளிட்டவை வழங்கப்படும் என்றார்.

தொண்டர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் வடுகம்பாளையம், காமராஜர் காலனி, அறிவொளி நகர், சித்தம்பலம், சின்னவடுகபாளையம், வெங்கிட்டாபுரம், சின்னியகவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக வேட்பாளர் ஆனந்தன் பிரசாரம் செய்தார். வாக்கு சேகரிக்கச் சென்ற ஆனந்தனுக்கு வழி நெடுகிலும் அதிமுகவினர் மேளதாளங்கள் முழங்கவும், ஆரத்தி எடுத்தும் வரவேற்பு தெரிவித்தனர்.





