ஸ்டாலின் தொகுதியில் தேர்தல் ரத்தா? ஆணையத்தில் அதிமுக புகாரால் பரபரப்பு
பணப்பட்டுவாடா புகாரை தொடர்ந்து மு.க. ஸ்டாலின் போட்டியிடும் சென்னை கொளத்தூர் உட்பட 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேர்தலை ரத்து செய்ய வேண்டுமென்று, தேர்தல் ஆணையத்தில் அதிமுக தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் நாளை சட்டமன்றத் தேர்தல், ஒரேகட்டமாக நடைபெறவுள்ளது. தேர்தலுக்கான பிரச்சாரங்கள் நேற்று இரவோடு ஓய்ந்த நிலையில், தேர்தல் வாக்குப்பதிவுகான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.
வாக்குச்சாவடிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றுவது, பதற்றமான வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பை தீவிரப்படுத்துவது உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் மும்முரமாக நடைபெறுகிறது.
இதனிடையே, சென்னையில் சில தொகுதிகள் உட்பட 5 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்யக்கோரி, தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார் அளித்து உள்ளது. இது தொடர்பாக, தமிழக தேர்தல் அதிகாரியிடம் அதிமுக தரப்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் மனுவில், சென்னை கொளத்தூர், திருவண்ணாமலை, சேப்பாக்கம் ,காட்பாடி, திருச்சி மேற்கு ஆகிய 5 தொகுதிகளில் திமுக நவீன முறையில் பணப்பட்டுவாடா செய்து உள்ளது. எனவே ஐந்து தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய அதிமுக தேர்தல் ஆணையத்திடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டு உள்ளது.
நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் ஆணையத்தில் அதிமுக முறையிட்டு இருப்பது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.





