--- --:--:-- --

முதல்வராக வேண்டுமென ஆசை! கோவை பிரசாரத்தில் சரத்குமார் ஓபன் டாக்!

Sarath kumar 01

எனக்கும் முதல்வராக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதைக் காலம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று, கோவை தேர்தல் பிரசார கூட்டத்தில் சமக தலைவர் சரத்குமார் பேசினார்.

 

வரும் 6ம் தேதி நடைபெறும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சியுடன், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்த நிலையில், கோவை சிங்காநல்லூர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து, உடையாம்பாளையம், உப்பிலிபாளையம் உள்ளிட்ட இடங்களில் வேன் மூலமாகச் சென்றும், நடந்து சென்றும் சரத்குமார் பிரச்சாரம் செய்தார்.

 

பிரச்சாரத்தின் போது, சரத்குமார் பேசியதாவது: தமிழகத்தை இதுவரை ஆண்ட அரசியல் கட்சியினர் மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவில்லை. ஏனென்றால், அரசியலை அவர்கள் வியாபாரமாகப் பார்க்கின்றனர். நானும் கமல்ஹாசனும் கலைச்சேவை செய்துவிட்டு, எங்களது சொந்தப் பணத்தில் மக்களுக்குச் சேவை செய்ய வந்துள்ளோம்.

 

அரசியலில் எனக்கு 25 ஆண்டுகள் அனுபவம் இருக்கிறது. டிவி, ஊடகங்கள் அதிக அளவில் இல்லாததால், எனது போராட்டங்கள், சேவைகள் மக்களைச் சரியாகச் சென்றடையவில்லை. திமுக, அதிமுகவில் இருந்துள்ளேன். நான் வீடு வீடாக பேப்பர் போட்டு, சைக்கிள் கடையில் வேலை பார்த்து, நடிகனாகி இந்த நிலைக்கு வந்திருக்கிறேன்.

 

எனக்கும் முதல்வர் பதவியில் அமர வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதை, காலம் வரும் போது பார்த்துக் கொள்ளலாம். தற்போது எங்களது நோக்கம், இங்குள்ள இரு கட்சிகளையும் அகற்ற வேண்டும் என்பதுதான். எங்கள் கூட்டணி முயற்சி என்பது ஒரு விதைதான். விரைவில் இது விருட்சமாக வளரும் என்று, சரத்குமார் பேசினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon