கிளாசிக்காக ஒரு மோசடி! பூங்கா பராமரிப்பு என்ற பெயரில் பிரபல நிறுவனம் லாபம்.. ‘குற்றம் குற்றமே’செய்தியால் திருப்பூர் மாநகராட்சி வேகம்!
பூங்காவை பராமரிப்பதாகக் கூறிக் கொண்டு ஓசியில் விளம்பரங்கள் செய்து திருப்பூரைச் சேர்ந்த பிரபல நிறுவனம், மாநகராட்சிக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்தியது தெரிய வந்துள்ளது. “குற்றம் குற்றமே” வார இதழ் சுட்டிக்காட்டியதை அடுத்து, அந்த விளம்பரங்களை அதிகாரிகள் மறைத்துள்ளனர்.
பனியன் தொழிலுக்கு புகழ்பெற்ற திருப்பூரில், புதிது புதியாக பல நிறுவனங்கள் முளைத்து, பல முன்னணி ஜாம்பவான்களுக்கே சவால் விடுத்து வருகின்றன. போட்டி அதிகமாகிவிட்டன; போதாக்குறைக்கு, அரசு விதிகளின்படி, இத்தகைய நிறுவனங்கள் வேறுவழியின்றி, பொதுச்சேவை செய்வதாகக்கூறி, கணக்கிற்கு சில சமுதாயச் சேவைகளை செய்து வருகின்றன.
சேவை என்ற போர்வையில்….
ஒருசில நிறுவனங்கள், உள்ளபடியே சிறப்பாக சமுதாயச் சேவை செய்து, மக்களுக்கு தொண்டாற்றி வருவதை மறுக்க முடியாது. இன்னும் பல நிறுவனங்களோ, அரசுக்கு கணக்கு காட்டும் வகையிலும், பொது மக்களிடம் விளம்பரப்படுத்திக் கொள்ளும் நோக்கிலும், சமுதாயப்பணியை ஒரு கேடயமாக்கிக் கொள்கின்றன. அறக்கட்டளையை தொடங்கி, சேவையாற்றிக் கொண்டே, கிடைக்கும் கேப்பில் தங்களது நிறுவனங்களுக்கு விளம்பரம் தேடிக் கொள்கின்றன.
திருப்பூரில், சில பிரபல நிறுவனங்களின் உரிமையாளர்களும் இதில் அடங்குவர். இவர்கள் எல்லாம், திருப்பூரை வனம் ஆக்குவதாக்கூறி, இவர்கள் பணமாக்கும் வித்தையை செய்து வருகின்றனர். அங்குமிங்குமாக சில ஆயிரம் மரங்களை நட்டு, சுற்றுச்சூழலை பேணி காப்பதாகவும், பசுமைத் தோழன் என்றெல்லாம் கணக்கு காட்டி, மக்கள் காதில் பூ சுற்றுவது வாடிக்கையாக உள்ளது.

பூங்காவில் விதிமீறி விளம்பரங்கள்!
அவ்வகையில் தற்போது சர்ச்சையில் சிக்கி இருப்பது, கிளாசிக் போலோ என்ற பிரபலமான முன்னணி நிறுவனம் தான். டி சர்ட் உள்ளிட்டவற்றை தயாரித்து வரும் இந்த நிறுவனம், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள், ஊடக முதலாளிகளிடம் தனக்குள்ள செல்வாக்கை பயன்படுத்தி, தனது நிறுவனத்திற்கு விளம்பரம் தேடி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, திருப்பூர் மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் இல்லாத காலத்தில், அதிகாரிகளை தங்களது கைக்குள் போட்டுக் கொண்டு, சாமர்த்தியமாக டி சர்ட் பிராண்ட்டுக்கு ஓசியிலோ அல்லது மலிவு விலையிலோ விளம்பரங்களை செய்துள்ளது, கள ஆய்வில் தெரிய வந்துள்ளது.
திருப்பூரில் ரயில்வே ஸ்டேஷன், மேம்பாலம், குமரன் ரோடு உள்ளிட்ட பகுதிகள் சந்திக்கும் மையப்பகுதியில் ஈஸ்வர மூர்த்தி பூங்கா உள்ளது. எப்போதும் மக்கள் நடமாட்டமுள்ள இப்பகுதியில், நாலாபுறத்தில் இருந்து வாகனங்கள் வந்தாலும், இந்த பூங்காவும் அதன் சுற்றுச்சுவரும் பளிச்சென்று கண்ணில் படும் வகையில் உள்ளது.
“குற்றம் குற்றமே” குழு கள ஆய்வு
இந்த பூங்காவை தனது வணிக நோக்கத்திற்கு பயன்படுத்திக் கொள்ள நினைத்த கிளாசிக் போலோ நிறுவனம், மாநகராட்சி அதிகாரிகளை அணுகி, பூங்காவை தாங்கள் பராமரித்து தருவதாகக் கூறி, அதற்கு பிரதி உபகாரமாக, சுற்றுச்சுவர்களில் பனியன் நிறுவன பிராண்ட் பெயரை, லோகோவை நாலாபுறமும் 20-க்கும் அதிகமான இடங்களில் வைத்துள்ளனர்.
பல ஆண்டுகளாக உள்ள இந்த விளம்பரத்தில், விதிமீறல் இருப்பதாக எழுந்த சந்தேகத்தின் பேரில், “குற்றம் குற்றமே” வார இதழ் நிருபர் குழு களமிறங்கியது. இதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் நமக்கு தெரிய வந்துள்ளது.
முன்பு திருப்பூர் மாநகராட்சி ஆணையராக இருந்த அசோகன் காலத்தில் இத்தகைய விதிமீறல்கள் அதிகளவில் நடந்துள்ளது. அப்போதுள்ள ஆணையரும், அதிகாரிகள் சிலரும், சுய நலத்திற்காகவும் இத்தகைய விதிமீறலுக்கு அனுமதி அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. அப்போதைய, 4வது மண்டலத்தின் உதவி ஆணையர் கண்ணன், உதவி பொறியாளர் ஹரி ஆகியோர், தங்களது பதவிக்காலத்தில் இத்தகைய விதிமீறல்களை கண்டும் காணாமல் உடந்தையாக இருந்துள்ளதாக, அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
ஆர்.டி.ஐ. மனுவுக்கு பதில் இல்லை
இவர்கள் எல்லோரையும் தங்களது கைப்பாவைபோல நடத்தி, மாநகராட்சி பூங்காவை பராமரிப்பதாககூறி, வணிக நிறுவனங்கள் தங்களது வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தி உள்ளன. ஈஸ்வரமூர்த்தி பூங்கா விளம்பர விவகாரத்திலும் இதுதான் நடந்துள்ளது. இது குறித்த தகவல்களை சேகரித்ததுடன், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மாநகராட்சியிடம் விளக்கம் கேட்டோம்.
அதில், ஈஸ்வர மூர்த்தி பூங்கா பராமரிப்புக்கு என்று தனியாருடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதா? அதற்கான ஆவணங்கள், ஆதாரங்கள் உள்ளனவா? அப்படி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்றால், என்ன தொகைக்கு எத்தனை ஆண்டுகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது? பராமரிப்பு தனி என்றாலும் விளம்பரம் வைத்துக் கொள்ள தொகை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதா? பூங்காவில் விளம்பரம் வைத்த வகையில், மாநகராட்சிக்கு இதுவரை கிடைத்த வருவாய் எவ்வளவு? என்று, தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டோம். ஆனால், அதிகாரிகள் தரப்பில் எந்த பதிலும் இல்லை.
இதையடுத்து, ஈஸ்வரமூர்த்தி பூங்கா சுற்றுச்சுவரில் உள்ள பனியன் நிறுவன விளம்பரம் தொடர்பாக, மாநகராட்சி
4வது மண்டல உதவி ஆணையரை “குற்றம் குற்றமே” தரப்பில் அணுகி கேட்டோம். அதிகாரி தரப்பிலோ மழுப்பலான பதிலே வந்தது. விளம்பரம் உடனடியாக அகற்றப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டது. இதன் மூலம், விதிமீறல் நடந்துள்ளது அப்பட்டமாக உறுதியாகி இருக்கிறது.
பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு!
இதேபோல், பிக்பஜார் அருகே சிறிய அளவிலான சாலையோர பூங்கா உள்பட நகரின் முக்கிய இடங்களிலும், எந்த பராமரிப்பும் செய்யாமல் சுய லாபத்திற்காக விளம்பரங்களை வைத்து, ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறது. ஒரு பூங்காவில், குறைந்தபட்சம் ஒரு விளம்பரத்தின் மூலம் ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என்ற நிலையில், நகரின் பல இடங்களில் இத்தகைய நிறுவனங்களின் விதிமீறிய விளம்பரங்கள் மூலம் கோடிக்கணக்கில் மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்திருக்க வேண்டும்.

ஆனால், தொழிலதிபர்களும் அதிகாரிகளும் விதிமீறல்கள் புரிவதால், மாநகராட்சிக்கு கிடைக்க வேண்டிய வருவாய் தடைபடுகிறது. இதுபற்றி மாநகராட்சி ஆணையாளர் பிராந்தி குமார் பாடியிடம், நமது குற்றம் குற்றமே இதழ் தரப்பில் கேட்டபோது, விதிமீறல்கள், வருவாய் இழப்பு தெரிய வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தற்போதைய உதவி ஆணையாளர் செல்வநாயகம் நம்மிடம் கூறுகையில். “இத்தகைய விதிமீறல் தொடர்பாக உறுதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உறுதிபட கூறினார்.
இதனிடையே, நமது “குற்றம் குற்றமே” இதழ் சுட்டியக் காட்டியதன் எதிரொலியாக, உதவி பொறியாளர் கோவிந்த பிரபாகர் , ஈஸ்வர மூர்த்தி பூங்கா சுற்றுச்சுவரில் உள்ள கிளாசிக் போலோ பிராண்ட் விளம்பரங்களை, உடனடியாக மறைத்துள்ளார். இதன் மூலம், விதிமீறல் நடந்துள்ளதும் உறுதியாகி இருக்கிறது.
சாட்டையை சுழற்றுவாரா மேயர்?
திருப்பூர் மாநகராட்சிக்கு சொந்தமாக நகரில் உள்ள பல இடங்களில் இதுபோன்ற விதிமீறல்களும், அதனால் மாநகராட்சிக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பும் உள்ளது என்பது, நமது கள ஆய்வில் தெரிய வருகிறது.
மாநகராட்சியின் புதிய மேயர் தினேஷ்குமார், வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை தருவோம் என்று உறுதி அளித்துள்ளார். எனவே, அவரும், மண்டலத் தலைவர்களும், உதவி ஆணையர்களும் உடனடியாக நகரில் உள்ள விதிமீறல் விளம்பரங்கள், பூங்கா பராமரிப்பு பணிகளை, கள ஆய்வு செய்ய வேண்டும்.
அத்துடன், அதிகாரிகளை வளைத்தோ, அல்லது மோசடியாக ஏமாற்றியோ, மாநகராட்சிக்கு ஏற்படுத்திய இழப்பீடுகளை வட்டியுடன் தொழிலதிபர்களிடம் வசூலிக்க வேண்டும்; விதிமீறல்கள் தொடர்பாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாகும்.








