சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த இந்த கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் – முதலமைச்சர்
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி இந்த கூட்டத் தொடரிலேயே தீர்மானம் கொண்டு வர உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கை விவாதத்தில் பங்கேற்று பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் உறுப்பினர் ஜி.கே.மணி, வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, கடந்த ஆட்சியில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு சரியான தரவுகள் இன்றி கொடுக்கப்பட்டதால் உயர் மற்றும் உச்ச நீதிமன்றங்கள் ரத்து செய்துவிட்டன என்றார்.
மத்திய பாஜக கூட்டணியில் உள்ள பாமக சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தவைக்க வேண்டும் என்றார். அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடந்த பிறகு தான் உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்றும் இல்லையேல் பிகார் போல தனி இட ஒதுக்கீடு நீக்கப்பட்டுவிடும் என்றார்.
இதை ஏற்காத நிலையில், பாமகவினர் சட்டப்பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.சாதி வாரி கணக்கெடுப்பு வேறு, உள்இடதுக்கீடு வேறு என பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்த பாமக எம்எல்ஏ ஜி.கே. மணி தெரிவித்துள்ளார். நியூஸ்18க்கு பேட்டி அளித்த அவர், உள் இடஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.





