சிஎன்ஜி எரிவாயு விலை அதிரடி உயர்வு..!
பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சிஎன்ஜி எரிவாயு விலையும் அதிகரித்துள்ளது. இதனால், ஆட்டோ, கார் உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.
ஈரான் போர் பதற்றத்தாலும் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வரும் நிலையில், பெட்ரோல், டீசல், கேஸ் விலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில், ஆட்டோ மற்றும் கார்களுக்கு பயன்படுத்தப்படும் சிஎன்ஜி எரிவாயு விலை கிலோவுக்கு 2 ரூபாய் உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஒரு கிலோ சிஎன்ஜி எரிவாயு விலை ரூ.93.50 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிலோ ரூ.91.50 என விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 2 ரூபாய் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் ஆட்டோ, கார் பயனாளர்கள் பலரும் சிஎன்ஜி எரிவாயு பயன்படுத்தி வரும் நிலையில், இந்த விலை உயர்வு அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்புவரை சிஎன்ஜி தட்டுப்பாடு தமிழகம் முழுவதும் இருந்தது. போர் பதற்றம் காரணமாக இந்த நிலை இருந்தது. தற்போது சிஎன்ஜி தட்டுப்பாடு நீங்கிய நிலையில், விலை உயர்த்தபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.





