இ.பி.எஸ் பொதுச் செயலாளராக தேர்வானதற்கு எதிராக வழக்கு..!
இரட்டை இலை சின்னம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறந்தவுடன், முதல்வராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்ததை தொடர்ந்து புதிய முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கினார். அதன்பிறகு, ஒருங்கிணைப்பளாராக இருந்த ஒ.பி.எஸ் இணை ஒருங்கிணைப்பாளராக இருந்த இ.பி.எஸ் ஆகிய இருவருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டு கட்சியில் சலசலப்பு அதிகரித்தது.
இதனையடுத்து கட்சியின் பொதுக்குழுவை கூட்டிய எடப்பாடி பழனிச்சாமி, கட்சியின் பொதுச்செயலாளராக தன்னை அறிவித்து கொண்டார். இதற்கு எதிராக இருந்த ஒ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், இந்த நியமனம் மற்றும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக ஒ.பி.எஸ் தரப்பில் நீதிமன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. இந்த வழக்கில், ஒருவருக்கு சாதகமான தீர்ப்பு வரும்போது மற்றொருவர் மேல்முறையீடு செய்து வழக்கமாக இருந்து வருகிறது.
தமிழகத்தில் அடுத்து சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. என்.டி.ஏ கூட்டணியில், பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்க உள்ளது. இதனிடையே, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த சூரிய மூர்த்தி, என்பவர் கடந்த 2022 ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களையும், பொதுச் செயலாளராக எடப்பாடி கே.பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று அறிவிக்க கோரி சென்னை சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை தள்ளுபடி கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை சிவில் கோர்ட்டு விசாரணைக்கு ஏற்க மறுத்து தள்ளுபடி தள்ளுபடி செய்த நிலையில், எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சூரியமூர்த்தி சிவில் கோர்ட்டில் தொடர்ந்த வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சூரிய மூர்த்தி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.எஸ்.நரசிம்மா, ஆலோக் ஆராதே அமர்வு இந்த மேல்மேல்முறையீட்டை வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.






