அரசவைக் கவிஞர்களுக்கு இது நல்ல பாடம் – மாணிக்கம் தாக்கூர்
தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையிலான கூட்டணியில் நீடித்து வரும் சலசலப்புகள் இன்னும் முடிவுக்கு வந்ததாகத் தெரியவில்லை. விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான மாணிக்கம் தாக்கூர், சமூக வலைதளத்தில் இட்ட காரமான பதிவு ஒன்று தற்போது அரசியல் களத்தில் மீண்டும் ஒரு புதிய புயலைக் கிளப்பியுள்ளது.
மாணிக்கம் தாக்கூரின் பதிவுக்கு அடிப்படையாக, காங்கிரஸ் நிர்வாகி ஒருவர் இட்ட பதிவு அமைந்தது. அந்தப் பதிவில், “கடந்த சட்டமன்றத் தேர்தலில், திமுக 20,000 வாக்குகளுக்குள் வெற்றி பெற்ற தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் கட்சியே உதவி செய்திருக்கிறது. ஆனால், இன்று நாங்கள் ஆட்சியில் பங்கு கேட்டால் எங்களை வெளியே போகச் சொல்கிறீர்கள்” என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிர்வாகியின் பதிவை டேக் செய்த மாணிக்கம் தாக்கூர், “அரசவைக் கவிஞர்களுக்கும் இந்த ஐடி விங் மகான்களுக்கும் இது நல்ல பாடம்” என்று விமர்சன தொனியில் பதிலளித்துள்ளார். இதில், ‘அரசவைக் கவிஞர்கள்’ என்று அவர் மறைமுகமாகக் குறிப்பிடுவது, திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினரை ஆகும். இவர்கள் தொடர்ந்து காங்கிரஸை விமர்சிப்பதைச் சுட்டிக்காட்டும் வகையிலேயே இந்தப் பதிவு அமைந்துள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில், 58 தொகுதிகளில் 20,000 வாக்குகளுக்கும் குறைவாகவே திமுக வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தொகுதிகளில் எல்லாம் காங்கிரஸ் அளித்த ஆதரவும், உழைப்பும் திமுகவின் வெற்றிக்கு உதவியுள்ளது. அதாவது, திமுகவின் வெற்றியில் காங்கிரஸின் பங்கு இருக்கிறது என்று அவர்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.
தங்களுடைய உழைப்பு இருந்தும், ஆட்சியில் பங்கு அல்லது அதிகாரத்தில் பங்கு கேட்டால், திமுக அதற்குச் செவிசாய்க்கவில்லை என்ற ஆதங்கம் காங்கிரஸ் தரப்பில் தொடர்ந்து எழுப்பப்பட்டு வருகிறது. மாணிக்கம் தாக்கூர் ராகுல் காந்திக்கு மிக நெருக்கமானவர் என்பதால், இவரது பதிவுக்குப் பின்னால் காங்கிரஸ் தேசியத் தலைமையின் தலையீடு இருக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆனாலும், தேசியத் தலைமை இன்னும் திமுக உடனான கூட்டணியைத் தொடரவே விரும்புவதாகத் தெரிகிறது.திமுக உடனான கூட்டணியில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதிகள் என காங்கிரஸ் தொடர்ந்து பேசி வந்தாலும், திமுக தரப்பிலிருந்து அதற்கு எந்தவிதமான பதிலும் இல்லை.
இந்த விவகாரங்கள் குறித்து விவாதிக்க, வரும் ஜனவரி 18ஆம் தேதி டெல்லியில் ஒரு முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து, இந்த மாத இறுதியில் ராகுல் காந்தி தமிழ்நாட்டிற்கு வர இருக்கிறார். அப்போது இந்தச் சலசலப்புகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என்று காங்கிரஸ் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.






