பயில்வான் ரங்கநாதன் மீது சுசித்ரா புகார்..!
தன்னைப் பற்றி அவதூறு பரப்பி வரும் நடிகர் பயில்வான் ரங்கநாதன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிரபல பின்னணி பாடகி சுசித்ரா புகார் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் மாதம் தனியார் யூடியூப் சேனலில் பேசிய பயில்வான் ரங்கநாதன் தன்னைப் பற்றி மிகவும் ஆபத்தான குற்றச்சாட்டுகளை கூறி இருப்பதாக புகாரில் தெரிவித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக சமூக வலைத்தளத்தில் தன்னைப் பற்றி அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்களையும் பயில்வான் ரங்கநாதன் தொடர்ந்து பரப்பி வருவதாக பாடகி சுசித்ரா கூறியுள்ளார்.
கடந்த 2010ஆம் ஆண்டு தன்னுடைய ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்ட சூழ்ச்சி விவகாரம் தொடர்பாக புகார் அளித்ததாகவும் விசாரணையின் பொழுது நடிகர் தனுஷ் இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் கார்த்திகா குமார் ஆகியோர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்ததாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
தற்பொழுது பயில்வான் ரங்கநாதனும் இந்த பின்னணியில் இருக்கலாம் என்று சந்தேகம் உள்ளதாகவும் புகார் மனுவில் பாடகி சுசித்ரா தெரிவித்துள்ளார்.






