--- --:--:-- --

கஞ்சா போட்டு சமூக விரோதிகள் ஆட்டம்! பொதுமக்களுக்கு தினமும் திண்டாட்டம்! விழித்துக் கொள்வார்களா திருப்பூர் – 15,வேலம்பாளையம் போலீசார்?

images (45)

வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில், காவல்துறையினர் கண்டு கொள்ளாததால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைதூக்கி இருக்கிறது; இதனால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

 

திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் மற்றும் திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகள் பெரும்பாலும் புறநகர் பகுதிகளாக உள்ளன. நகர எல்லையை ஒட்டிய இந்த புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான குடியிருப்புகள் பெருகி வருகின்றன.

 

அதே நேரம், காவல்துறையினரின் கண்காணிப்பு போதியளவுக்கு இல்லை. இதனால், இப்பகுதிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து, சமூக விரோதச் செயல்கள் தலைதூக்கி உள்ளன. கஞ்சா போட்டுக் கொண்டு போதை தலைகேற்றிய ஆசாமிகள், வழிப்பறி, செயின்பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.

 

போதை, கஞ்சா ஆசாமிகளின் நடமாட்டத்தால், பட்டப்பகலிலேயே பெண்கள் தனியாக சென்று வருவது பெரும் அச்சுறுத்தலாக அமைந்துவிடுகிறது. இதை நிரூபிப்பது போல் பல சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இதில் பாதிக்கப்படுவோர், போலீசில் புகார் அளிக்க தயங்குவதால், அவை வெளிச்சத்துக்கு வராமல் போய்விடுகின்றன.

 

திருப்பூர் காலேஜ் ரோடு அணைப்பாளையம் தாண்டியதும் ரயில்வே மேம்பாலம் பணி நடைபெறும் பகுதியில் கஞ்சா பயன்பாடும், சமூகவிரோதிகளின் அட்டகாசமும் அதிகரித்துள்ளதாக, அப்பகுதி பெண்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.

 

குறிப்பாக, ஜெ.ஜெ. நகர் பகுதியில் உள்ள கழிப்பிடம் அருகே உள்ள ஒதுக்குப்புறமாக இடத்தில், சமூக விரோதிகள் சிலர் எந்த நேரத்திலும் அமர்ந்து கொண்டு கஞ்சா போடுவது, மதுபானம் அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால், கழிப்பிடம் பயன்படுத்த பெண்கள் தயங்கும் சூழல் உள்ளது. அங்கு வரும் பெண்களை, சமூக விரோதிகள் கேலி செய்து, வம்பு செய்வது போன்றவற்றில் இறங்கி, அடாவடி செய்கின்றனர்.

 

 

இதை கண்காணித்து தடுக்க வேண்டிய வேலம்பாளையம் போலீசார், சரிவர ரோந்து செல்லாமல் அலட்சியமாக உள்ளனர். போலீசார் எண்ணிக்கை பற்றாக்குறை என்ற சாக்குபோக்கு சொல்லி சமாளிக்க முற்படுகின்றனர் ; இது சமூக விரோதிகளுக்கு கொண்டாட்டமாகிவிடுகிறது. பொதுமக்களின் பாடு திண்டாட்டமாகிவிடுகிறது.

 

இதேபோல், திருமுருகன்பூண்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சோளிபாளையம், கணியாம்பூண்டி, வஞ்சிபாளையம் உள்ளிட்ட பகுதிகளிலும் சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதாக, அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

போலீசார் சரிவர ரோந்து செல்லாததால், சமூகவிரோதிகள் துணிச்சலுடன் நடமாட, பொதுமக்களோ பயந்து பயந்து வெளியே வர வேண்டியுள்ளது. தனியே செல்லும் பெண்களை குறி வைத்து பட்டப்பகலில் செயின்பறிப்பு சகஜமாக நடக்கிறது.

 

மொபைல் போனில் பேசிக் கொண்டே நடந்து செல்லும் நபர்களிடம், முகவரி கேட்பது போல் டூவிலரில் வரும் ஆசாமிகள், நொடிப்பொழுதில் செல்போனை பறித்துக் கொண்டு மாயமாகிவிடுகின்றனர். இதில் பாதிக்கப்படுவோர் பெரும்பாலும் போலீசில் புகார் தெரிவிக்காமல் விட்டுவிடுகின்றனர்.

 

இனியாவது, போலீசார் தங்களது தூக்கத்தை கலைத்து கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்; முக்கிய சந்திப்புகள், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் கண்காணிப்பு கேமரா வைக்க அறிவுறுத்த வேண்டும். சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, பொதுமக்கள் நிம்மதியுடன் நடமாட போலீசார் உதவ வேண்டும்.

 

Right Menu Icon