காவு வாங்கும் ஆன்லைன் ரம்மி விளையாட்டு…!
ஆன்லைன் சூதாட்டத்தில் பணம் இழப்பு அதிகரிக்கும் என்பதால் அதனை தவிர்க்குமாறு சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். 20 சவரன் தங்க நகை, 3 லட்சம் பணத்தை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்த மனவருத்தத்தில் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பையும் உறவினர்கள் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி புதுநகர் பகுதியை சேர்ந்தவர்கள் பவானி – பாக்யராஜ் தம்பதி. பவானி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் அதிக கவனம் செலுத்தியதால் பெற்றோரும், கணவரும் பவானியை கண்டித்துள்ளனர். இருப்பினும் தொடர்ந்து ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 20 சவரன் தங்க நகையை விற்று பணத்தை வங்கியில் செலுத்தி விளையாடி முழு பணத்தையும்ழந்துள்ளார்.
மேலும் தங்கையிடமிருந்து மூன்று லட்சம் ரூபாய் பணத்தையும் வாங்கி அதனை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் இழந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தங்கையிடம் மட்டும் கூறியுள்ளார்.
இந்நிலையில் நேற்றிரவு குளித்துவிட்டு வருவதாக சென்ற பவானி வெகு நேரமாகியும் வெளியே வராததால் கணவர் கதவை தட்டி பார்த்த பொழுது தூக்கிட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அழைத்து வந்தபோது பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.





