அன்னையை போல் ஒரு தெய்வமில்லை! அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் தாயார் மரணம்!ஆளுநர், முதல்வர், தலைவர்கள் இரங்கல்; ‘குற்றம் குற்றமே’ சார்பில் அஞ்சலி
தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் தங்கமணியம்மாள், வயது மூப்பின் காரணமாக, திருப்பூர் மாவட்டம் முத்தூரில் காலமானார்; அவருக்கு வயது 89.
தமிழக செய்தித்துறை அமைச்சரும், தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினரும், தி.மு.க.வின் திருப்பூர் கிழக்கு மாவட்ட பொறுப்பாளருமாக இருப்பவர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன். இவரது தாயார் தங்கமணியம்மாள்.
இவர்களது குடும்பம் விவாயத்தை பின்னணியாகக் கொண்டது. தங்கமணியம்மாள், திருப்பூர் மாவட்டம் முத்தூரில் உள்ள தங்களது தோட்ட இல்லத்தில் மு.பெ.சாமிநாதனுடன் வசித்து வந்தார். அங்கு விவசாய நிலம், தென்னந்தோப்பு உள்ளிட்டவைற்றுடன் உள்ள பூர்வீக வீட்டில் வசிக்கின்றனர்.

இந்த நிலையில், வயது மூப்பு காரணமாக தங்கமணியம்மாளுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, தங்கமணியம்மாள் மே 26ம் தேதி அகால மரணம் அடைந்தார்.
அமைச்சரின் தாயார் தங்கமணி அம்மாளுக்கு வயது 89. இந்த வயதிலும் அவர் சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்தார்; விவசாயப் பணிகளை கவனித்து வந்தார். அதே நேரம் அமைச்சரின் தாய் என்ற தோரணையை காட்டாதவர். சொந்த ஊரை தாண்டி வெளியே எங்கும் செல்ல விரும்பாதவர். கடந்த சில வாரங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உயிர் பிரிந்தது.
இந்த அகிலத்தில் அன்னையை போல் ஒரு தெய்வமில்லை; அந்த இழப்புக்கு ஈடு இணையில்லை. அமைச்சரின் தாயார் மறைவு செய்தி கேட்டு பலரும் அமைச்சர் சாமிநாதனுக்கு ஆழந்த இரங்கலை தெரிவித்து, துயரில் பங்கேற்றனர்.
ஆளுனர் ஆர். என். ரவி, அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தாயாரின் மறைவுக்கு தனது இரங்கலை பதிவு செய்தார். அதேபோல், அமைச்சர் சாமிநாதனை தொடர்பு கொண்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விசாரித்தார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனின் தாயார் தங்கமணி அம்மாள் அவர்கள் இயற்கை எய்தினார் என்பதை அறிந்து வருந்துகிறேன். தன்னை இத்தனை ஆண்டுகாலம் போற்றி வளர்த்த, தன் வளர்ச்சியை கண்டு உவகையும் பெருமையும் கொண்ட அருமைத் தாயாரை இழந்து நிற்கும் அமைச்சர் சாமிநாதனின் துயரில் நானும் பங்கெடுத்துக் கொள்கிறேன்.
அன்னையின் இழப்பால் மனம் அல்லலுற்றுள்ள செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்”என்று குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த தங்கமணியம்மாளின் உடலுக்கு திருப்பூர், ஈரோடு, கரூர், திண்டுக்கல், கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க. நிர்வாகிகள், பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், வர்த்தகர்கள், உறவினர்கள்,நகர, சுற்று வட்டார கிராம பொதுமக்கள் வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
குற்றம் குற்றமே சார்பில் அஞ்சலி!

செய்திதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களின் தாயார் தங்கமணி அம்மாளின் மறைவை ஒட்டி, ‘குற்றம் குற்றமே’ வார இதழ் தரப்பில் அதன் நிறுவனரும் ஆசிரியருமான மு. கண்ணதாசன் நேரில் மலரஞ்சலி செலுத்தினார்.
தாயாரின் மறைவு குறித்து அமைச்சரிடன் விசாரித்த ஆசிரியர் மு. கண்ணதாசன், தனது இரங்கலை தெரிவித்துக் கொண்டார். இந்த நிகழ்வின் போது ‘குற்றம் குற்றமே’ வார இதழின் தலைமை செய்தியாளர் ஜான் சாமுவேல் உடன் இருந்தார்.





