மேயராக பொறுப்பேற்றார் தினேஷ்குமார் : அங்கியணிந்து செங்கோல் ஏந்தி கம்பீரம்..! திமுக, கூட்டணியினர் புடைசூழ பதவியேற்பு..
கூட்டணி கட்சியினர், திமுக நிர்வாகிகள் புடைசூழ, திருப்பூர் நகரின் 3வது மேயராக, தினேஷ்குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். மேயர் அங்கியணிந்து, செங்கோல் ஏந்தியவாறு அரியணையில் அமரவைக்கப்பட்டார்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில், திருப்பூர் மாநகராட்சியை திமுக கைப்பற்றியது. திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கு நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 37 இடங்களில் வென்றது. இதையடுத்து, மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது.
மேயர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்ட பட்டியலில், இதில் திமுக மூத்த நிர்வாகிகள் பத்மநாபன், கோவிந்தசாமி ஆகியோருடன், இளம் ரத்தமான, 44 வயதேயான தினேஷ்குமாரின் பெயரும் இடம் பெற்றிருந்தது. இதில், திமுக சார்பில் வடக்கு மாநகர பொறுப்பாளரும், 49வது வார்டில் வெற்றி பெற்றவருமான தினேஷ்குமார், மேயர் வேட்பாளராக நேற்று அறிவிக்கப்பட்டார்.
எளிமையானவர், இனிமையானவர், துடிப்பானவர், வசதி வாய்ப்புகள் இருந்தும் பந்தா காட்டாமல் மக்களிடம் சகஜமாக பழகுபவர் என்ற பெயர் எடுத்த தினேஷ்குமாரின் செயல்பாடுகளால், அவரை மேயர் பதவிக்கு திமுக தலைமை தேர்வு செய்தது.
திமுகவில் எந்த கோஷ்டி பூசலிலும் சிக்காதவர், சர்ச்சை இல்லாதவர் என்ற வகையில், தினேஷ்குமாரின் பெயர் அறிவிக்கப்பட்டதும், திமுகவினர் உற்சாகமடைந்தனர். அதேபோல், கடுமையாக உழைக்கக்கூடியவர், மாநகருக்கு நல்லது செய்ய வேண்டுமென்று உள்ளபடியே விரும்புவர் என்ற வகையில், நடுநிலையாளர்கள், பொதுமக்களும் தினேஷ்குமார் மேயராக அறிவிக்கப்பட்டதால் மகிழ்ச்சியும் நிம்மதியும் அடைந்தனர்.
இந்த சூழலில், மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கான மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 4) காலை நடைபெற்றது. அவ்வகையில், திருப்பூரிலும் இன்று மேயர் பதவிக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலக கூட்டரங்கில், தேர்தல் அலுவலரான மாநகராட்சி ஆணையர் கிராந்தி குமார் பாடியிடம், தினேஷ்குமார் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையில், தினேஷ்குமார் மாநகராட்சி மேயராக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார், மேயர் தினேஷ்குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின்னர், மேயருக்கான அங்கி அணிந்து, செங்கோல் ஏந்தியவாறு மேயர் இருக்கையில் தினேஷ்குமார் அமர வைக்கப்பட்டார்.
இந்த நிகழ்வில், மேயராக தேர்வான தினேஷ்குமாருக்கு, திருப்பூர் தெற்கு எம்எல்ஏ செல்வராஜ், டிகேடி நாகராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த திருப்பூர் எம்.பி. சுப்பராயன், எம்.கே.எம். பாலு, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணன், சிபிஎம் மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்ட பலர், திமுக நிர்வாகிகள் பங்கேற்று, பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில், எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.






