சபரிமலையில் மகரவிளக்கு பூஜைக்காக இன்று நடை திறப்பு..!
மகரவிளக்கு பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. மண்டல பூஜைக்காக நவம்பர் 16ஆம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டு நாற்பத்தி ஒரு நாள் பூஜைக்கு பின் கடந்த 26ஆம் தேதி மண்டல பூஜை நடத்தப்பட்டது.
கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நாளொன்றுக்கு 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை திறக்கப்படுகிறது. முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதி நடைபெறுகிறது.
அன்று மாலை 6 மணியளவில் பொன்னம்பல மேட்டில் ஜோதிதரிசனத்தை திரளான பக்தர்கள் காண்பார்கள். புத்தாண்டிற்கு பொதுமக்கள் அதிகளவில் கூடுவதைத் தடுக்க கேரளாவில் இன்று முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள சூழலில் சபரிமலை பக்தர்களுக்கு அந்த கட்டுப்பாடுகள் பொருந்தாது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.





