செல்போனை திருடியதாகக் கூறி சிறுமியை கட்டிவைத்து அடித்த சம்பவம்..!
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே செல்போன் திருடியதாக கூறி சிறுமியை கட்டி வைத்து அடித்ததாக எழுந்த புகாரில் ஒரு தம்பதியை காவல்துறையினர் கைது செய்தனர்.
குலமங்கலம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி தனது செல்போனை திருடி விட்டதாக கூறி அண்டை வீட்டுக்காரரான ஞானமணி அவரது மனைவி மலர் மற்றும் உறவினர்கள் சுப்பிரமணியன், பால்ராஜ் ஆகியோர் சேர்ந்து சிறுமியை ஒரு மரத்தில் கட்டிவைத்து அடித்ததாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அந்த சிறுமியை விடுவித்து அவர் திருடியதாக கூறப்படும் கைபேசியை கைப்பற்றி ஞானமணியிடம் ஒப்படைத்தனர். அந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்ய திருமங்கலம் காவல் துறையினர் உத்தரவிட்டதையடுத்து குலமங்கலம் காவல் நிர்வாக அலுவலரிடம் புகார் பெற்று 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.
இதனையடுத்து ஞானமணி, மலர் ஆகிய 2 பேரை கைது செய்த காவல்துறையினர் பாலசுப்பிரமணியன், பால்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.அதே வேளையில் தனது கணவர் திருட்டு வழக்கில் தொடர்புடையவர் என்பதால் அவரது பழக்கம் குழந்தைகளுக்கு வருவதால் அவர்களை திருத்த வேண்டும் என்பதற்காகவே தனது மகளை கட்டிவைத்து அடித்ததாகவும் சிறுமியின் தாயார் கூறியுள்ளார்.






