உத்தராகண்டில் மழை சேதங்களை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார் அமித் ஷா..!
உத்தரகண்ட் மாநிலத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டர் மூலமாக ஆய்வு செய்தார். தொடர் கனமழை காரணமாக உத்தரகண்ட் மாநிலத்தின் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
சாலைகள் சேதமடைந்துபாலங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இந்த நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டார். அவருடன் ஆளுநர் மற்றும் முதலமைச்சர் ஆகியோர் சென்றனர்.
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் இதுவரை 64 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளார். 10 க்கும் மேற்பட்டோரை காணவில்லை என்றும் 2 மலை ஏறும் குழுக்கள் காணாமல் போன நிலையில் ஒரு குழு கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்திருக்கிறார்.
அல்மோரா, நைனிடா பகுதிகளில் சாலைகள் சீர் அமைக்கப்பட்டுள்ளதாகவும் மின் உற்பத்தி நிலையங்கள் விரைவில் பணிகள் தொடங்கும் என்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியிருக்கிறார்.
இது தொடர்பாக உரிய நேரத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் சேதங்கள் தவிர்க்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். எந்த சுற்றுலா பயணியும் உயிரிழக்கவில்லை என்று மழை வெள்ளத்தில் சிக்கிய 3,500 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார்.






