தன்னை கடித்த பாம்பை தானும் கடித்துக் கொன்ற நபர் சிகிச்சையில் அனுமதி..!
ஓடுற பாம்பை புடிக்கிற வயது என்பது சிறுவர்களின் பயமரியாத தைரியத்தை குறிப்பதற்காக சொல்லப்பட்ட ஒரு பழமொழி. ஆனால் 45 வயது ஒடிசா மாநில வாலிபர் ஒருவர் தன்னை கடித்து விட்டு சென்ற பாம்பை விரட்டிச் சென்று பிடித்து கடித்துக் கொன்ற சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாம்பைக் கொன்ற தைரியசாலி கிஷோர் பத்ரா ஒடிசா மாநிலம் கவெரிபட்டினம் கிராமத்தை சேர்ந்தவர். சென்ற வாரம் ஒரு நாள் இரவு நேரத்தில் வயலில் வேலை செய்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருக்கிறார்.
நடந்து வந்து கொண்டிருந்த போது திடீரென காலில் ஏதோ எறும்பு கடித்தது போன்று உணர்ந்திருக்கிறார். இருப்பினும் பதற்றம் அடையாமல் திரும்பி பார்த்துள்ளார். அங்கு பாம்பு ஒன்று விறுவிறுவென ஊர்ந்து சென்று கொண்டிருப்பதைக் கண்டார்.
தன்னை கடித்தது அந்த பாம்பு தான் என்பதை புரிந்து கொண்ட கிஷோர் உடனடியாக அந்த பாம்பை விரட்டி சென்று கையில் பிடித்துள்ளார். நறுக் நறுக் என்று கோபம் தீர கடித்துள்ளார். பாம்பு கிஷோரின் கடி தாங்க முடியாமல் செத்துப்போனது.
அத்துடன் கிஷோர் விட்டுவிடவில்லை. செத்துப்போன பாம்பை கையில் எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். சிகிச்சைக்கு பிறகு நலமுடன் இருப்பதாக கிஷோர் கூறியுள்ளார். இரவில் சுறுசுறுப்பாக செயல்படும் பாம்புதான் கிஷோரை கடித்துள்ளது.







