திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம்..!
திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்படுகிறது. தேனியில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கின்றனர்.
தமிழக நலன் சார்ந்த விஷயங்களில் திமுக அரசின் மெத்தன போக்கை களைய வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. காலை 10 மணிக்கு அதிமுக தொண்டர்கள் தங்கள் வீடுகள் முன்பு பதாகைகளை ஏந்தி கவனயீர்ப்பு முழக்கங்களை எழுப்ப வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று நடைபெறும் போராட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வமும் சேலத்தில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கின்றனர்.
முன்னதாக இருவரும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிப்படி நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அடிப்படைத் தேவைகளுக்கான பொருட்கள் கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்திருந்தனர்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதி குறித்து வாய் திறக்காமல் உள்ளதாக தெரிவித்து இருந்தனர். அதிமுகவினர் மீது பொய் வழக்குப் போடும் அரசியல் ஆயுதத்தை கைவிட்டு நேர்மையாகவும் திறமையாகவும் ஆட்சி செய்ய திமுக அரசு முன்வர வேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தனர்.






