11ஆம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிகள் வெளியீடு..!
ஜூன் மூன்றாவது வாரத்தில் பதினோராம் வகுப்பு பாடங்களை இணையதளம் வாயிலாக தொடங்கலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்தான நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினோராம் வகுப்பு சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வி ஆணையம் வழங்கியுள்ளது. ஏற்கனவே ஒவ்வொரு பிரிவிலும் அனுமதிக்கப்படும் இடங்களுக்கு ஏற்ப மாணவர்கள் விருப்பம் தெரிவிக்கும் பாடப்பிரிவை அவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு பாடப்பிரிவில் அனுமதிக்கபட்ட இடங்களுக்கு மேல் மாணவர்கள் சேர விருப்பம் தெரிவிக்கும் பட்சத்தில் ஒவ்வொரு பாடத்திலும் 10 முதல் 15 விழுக்காடு வரை கூடுதலாக மாணவர்களைச் சேர்க்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதையும் கடந்து மிக அதிகப்படியான மாணவர்கள் ஒரு பிரிவில் சேர விருப்பம் தெரிவித்தால் அவர்களுக்கு அதே பிரிவின் முந்தைய பாடத்தில் இருந்து 50 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தி அதற்கு ஏற்ப மாணவர்களுக்கு பிரிவுகளை ஒதுக்கலாம் என பள்ளிக் கல்வி ஆணையம் தெரிவித்துள்ளதுது.
ஜூன் 3வது வாரத்தில் இருந்து பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்களை நடத்தலாம் எனவும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து கல்வி தொலைக்காட்சி இணையத்தில் பாடங்களை நடத்த ஆரம்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.






