தமிழகத்தில் 22 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்..!
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ,செங்கல்பட்டு உட்பட 22 மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு அடுத்த இரு தினங்களுக்கு 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வெப்பச்சலனம் காரணமாக திருப்பூர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், ஈரோடு, மதுரை, திருச்சி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் சூறைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது .
அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி ஆகும். குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்ஷியஸ் ஆக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் பெரம்பலூர், அரியலூர், நாகை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மற்றும் கரூர் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக பதிவாக கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X





