திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 19 பெண்கள்..!
திருப்பூரில் பின்னலாடை நிறுவனத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஒரிசாவை சேர்ந்த 19 பெண்கள் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு தொழிலாளர் நலத்துறை ஆணையம் தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தில் உள்ள தனியார் பின்னலாடைவனத்தில் ஒடிசாவை சேர்ந்த 19 பெண்கள் பயிற்சிக்காக அழைத்து வரப்பட்டு நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் கொரொனா காரணமாக அங்கு பணியாற்றிய ஒடிசா தொழிலாளர்கள் ஊர் திரும்பியதால் தாங்களும் ஊர் திரும்ப 19 பெண்களும் கேட்டுள்ளனர் .இதற்கு அந்த நிறுவனம் மறுப்புத் தெரிவித்ததுடன் அவர்களை தனி அறையில் அடைத்து செல்போனையும் பறித்து கொண்டது.
இதையறிந்து ஏற்கனவே ஊர் திரும்பிய தொழிலாளர்கள் ஒடிசாவில் உள்ள அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்திய வருவாய்த் துறையினர் 19 பெண்களை மீட்டனர்.
இதுதொடர்பாக இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய திருப்பூர் மாவட்ட ஆட்சியருக்கு தொழிலாளர் நலத் துறை ஆணையருக்கு மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ் உத்தரவிட்டார்.






