--- --:--:-- --

சூடு பிடித்தது தேர்தல்களம்… மனுதாக்கல் செய்ய இன்று கடைசிநாள்!

EC 02

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாளாகும் இதுவரை அதிகபட்சமாக கரூர் தொகுதியில் வேட்புமனுக்கள் தாக்கலாகி உள்ளன.

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் பலமுனை போட்டி நிலவுகிறது. எனினும் அ.தி.மு.க. கூட்டணி – தி.மு.க. கூட்டணி இடையே கடும் போட்டி உள்ளது. அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, தமாக இடம் பெற்றுள்ளன. திமுக கூட்டணியில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், மதிமுக உள்ளிட்டவை அங்கம் வகிக்கின்றன.

 

இதுதவிர, டிடிவி தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. கூட்டணியில் சரத்குமாரின் சமக, ஐஜேகே, ஓவைசி கட்சி உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கூட்டணி, நாம் தமிழர் கட்சியும் களத்தில் உள்ளன. இதுதவிர சீட் கிடைக்காத அதிருப்தியில் அதிமுக – திமுகவினர் சிலர் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

 

சட்டசபைத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கியது. அடுத்த இரு தினங்கள் விடுமுறை என்பதால் வேட்புமனு தாக்கல் சூடுபிடிக்கவில்லை. முகூர்த்த நாளான கடந்த 15ம் தேதி, முதல்வர் வேட்பாளர்களாக களத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி), திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் (கொளத்தூர்), அ.ம.மு.க. பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் (கோவில்பட்டி), மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன் (கோவை தெற்கு), நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் (திருவொற்றியூர்) ஆகிய 5 பேரும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்தனர்.

 

இதேபோல், பாஜக தலைவர்கள் எல்.முருகன் (தாராபுரம்), அண்ணாமலை (அரவக்குறிச்சி), குஷ்பு (ஆயிரம் விளக்கு), தேமுதிகவின் பிரேமலதா (விருதாச்சலம்) , அண்ணாநகர் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பொன்ராஜ், விருகம்பாக்கம் தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் கவிஞர் சினேகன் உள்ளிட்டவர்கள், நேற்று தத்தமது தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

 

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் நேற்றைய நிலவரப்படி, 3,293 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் 2,721 மனுக்களும், பெண்கள் 571 மனுக்கள் அடங்கும். மதுரை தெற்கு தொகுதியில்  திருநங்கை ஒருவர் வேட்புமனு அளித்துள்ளார். தமிழகத்தில் அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 51 வேட்புமனுக்களும், குறைந்தபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு, குளச்சல் ஆகிய 2 தொகுதிகளில் தலா 2 வேட்புமனுக்களும் தாக்கலாகி உள்ளன.

 

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று மதியம் 3 மணியுடன் நிறைவடைகிறது. எனவே மதியம் 3 மணிக்குள் தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்துக்கு வரும் வேட்பாளர்கள் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (சனிக்கிழமை) நடைபெற உள்ளது. மனுக்களை திரும்பப்பெற வரும் 22ம் தேதி (திங்கட்கிழமை) கடைசி நாளாகும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon