அதிமுகவினரின் ஆரவாரங்களுக்கு மத்தியில் அவிநாசியில் மனு தாக்கல் செய்தார் சபாநாயகர் தனபால்!
திருப்பூர் மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற அவிநாசி தனி தொகுதியில் சபாநாயகர் தனபால் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள 30 சட்டமன்ற தொகுதிகளுக்கும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 6ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி தொடங்கி, வரும் 19ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. முதல் நாளில் வேட்புமனு தாக்கல் மந்தமாக இருந்தது.
இந்தநிலையில் சுபயோக சுபமுகூர்த்த தினம் என்பதால், இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சியினரும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக தலைவர் ஸ்டாலின், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், கமல்ஹாசன் உள்ளிட்டவர்கள் இன்று மனு தாக்கல் செய்கின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்றதாக கருதப்படும் அவிநாசி தனி தொகுதியில், சட்டமன்ற சபாநாயகர் தனபால் போட்டியிடுகிறார். அவர் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதற்காக திருமுருகன்பூண்டி, ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள தனது வீட்டில் இருந்து அ.தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் சூழ காரில் புறப்பட்டு அவிநாசி வந்தார்.
அவரை, அவிநாசி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளரும் ஒன்றிய சேர்மனுமான ஏ.ஜெகதீசன், அவிநாசி வடக்கு ஒன்றிய செயலாளரும், சேவூர் ஊராட்சி மன்ற தலைவருமான சேவூர்.ஜி வேலுசாமி, அவிநாசி தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்பிரமணியம், அவிநாசி பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்களான லதாசேகர், கார்த்திக்ராஜா, ஆனந்தகுமார், விஜய்ஆனந்த், எம்.ஆர்.வேலுசாமி, மரகதமணி, கே.எம்.முத்துசாமி. சத்தியபிரகாஷ், வெங்கடாசலம், தம்பி ராஜேந்திரன், சுந்தரம், மூர்த்தி, ஆல்பா சரவணன், புதுப்பாளையம் செந்தில்குமார், கவுதமன், ஈஸ்வரன், பூண்டி ராஜேந்திரன், வேட்டுவபாளையம் செந்தில் உள்பட பலர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

அவர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டப்பேரவை தலைவர் ப.தனபால் (70) அங்கிருந்து நடந்து அவிநாசி தாலுகா அலுவலகத்திற்கு வந்தார். பின்னர் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சு.வாசுகியிடம் கொடுத்தார். அப்போது அவருடன் வடக்கு ஒன்றிய செயலாளர் சேவூர்.ஜி வேலுசாமி , மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ஏ.ஜெகதீசன், அவிநாசி தாசில்தார் கலைச்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அதிமுகவின் மாற்று வேட்பாளராக அவரது மனைவி கலைச்செல்வி (61) மனு தாக்கல் செய்தார். அவருடன் அன்னுர் வடக்கு ஒன்றிய செயலாளர் அம்பாள் பழனிசாமி, அன்னுர் மேற்கு ஒன்றிய செயலாளர் சாய் செந்தில் ஆகியோர் உடன் இருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதை அடுத்து அவிநாசி சேவூர் ரோட்டில் சாலையின் நடுவே தடுப்புகள் ஏற்படுத்தி போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.





