பறக்கும் படை அலுவலருக்கு மிரட்டல்… அமைச்சர் மீது 2 பிரிவுகளில் வழக்கு!
கோவில்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலரை மிரட்டிய புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதால, தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள், அமலில் உள்ளன. தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் சட்டமன்றத் தொகுதிகளிலும் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜு, கோவில்பட்டியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அமமுக பொதுச்செயலாளர் தினகரன், தி.மு.க கூட்டணி சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஊத்துபட்டி அருகே கடம்பூர் ராஜு காரில் வந்தபோது, வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரையும் நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது, அந்த அதிகாரியை கடம்பூர் ராஜு மிரட்டியதாக கூறப்படுகிறது.
மன உளைச்சலுக்கு ஆளான தேர்தல் பறக்கும்படை அதிகாரி மாரிமுத்து, இதுகுறித்து நாலாட்டின் புதூர் காவல்நிலையத்தில் அமைச்சர் மீது புகார் அளித்துள்ளார். இதனிடையே, தேர்தல் பறக்கும் படை குழுவிற்கு தலைமை தாங்கிய மாரிமுத்துவை, கோவில்பட்டி தொகுதியில் இருந்து, விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ். இதை அரசியல் கட்சியினர் கண்டித்தனர்.
இதனிடையே தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்துவை மிரட்டிய புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜு மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அமைச்சர் கடம்பூர் ராஜுவின் காரை பறக்கும் படையினர் சோதனை செய்ததன் காரணமாக பறக்கும்படை அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்த நிலையில், இடமாற்றம் செய்யப்பட்ட பறக்கும் படை அதிகாரி மாரிமுத்து மீண்டும் அதே இடத்தில் பணி நியமனம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.





