இன்று உலக மகளிர் தினம்! அரசியல் தலைவர்கள் வாழ்த்து!!
இன்று, உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதையொட்டி, பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பல்வேறு துறைகளில் இந்திய பெண்களின் சாதனை குறித்து பெருமை கொள்கிறோம். நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பெண்களுக்கு வணக்கம் என்று தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்தில், தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பெண்களின் பங்களிப்புகளை கொண்டாடும் நாள் இதுவாகும். இந்த நாள் பெண்களின் முக்கிய பங்கு மற்றும் சிறந்த சமூகம், தேசம், கட்டியெழுப்புவதில் அவர்களுடைய அயராத முயற்சிகளுக்கு மரியாதை காட்டுவோம் என்றார்.
முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்களின் வாழ்வியலில் பல்வேறு சவால்களை மன உறுதியுடன் எதிர்கொள்ளும் அனைத்து மகளிருக்கும் அன்பான மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு, பெண்கள் நலத்திட்டங்களை அம்மா வழியில் தொடர்ந்து செயல்படுத்தி, பெண்கள் பாதுகாப்பை என்றும் உறுதி செய்வேன் என உறுதியளிக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
துணை முதல்வர் ஓபிஎஸ், “ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால் அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்” தங்களின் ஈடு இணையற்ற உழைப்பால், அன்பால், தியாகத்தால் சமூக வளர்ச்சியில் அளப்பரிய பங்காற்றும், இப்பூமிப்பந்தை இயக்கும் அச்சாணியாகத் திகழும் பெண்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த “உலக மகளிர் தின” நல்வாழ்த்துகள்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டரில் தெரிவித்துள்ள வாழ்த்தில், தாயாக – மனைவியாக – சகோதரியாக – மகளாக சமூகத்தைத் தாங்கி நிற்கும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம்; திமுக ஆட்சியில் மகளிர் மேம்பாட்டிற்கு அளிக்கப்படவிருக்கும் முக்கியத்துவத்தின் தொடக்கமே ஒவ்வொரு குடும்பத் தலைவிக்கும் மாதம் ரூ.1000 உரிமைத்தொகை என்ற அறிவிப்பு! எனத் தெரிவித்துள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்தில், உலக போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரிய சக்தியாக திகழும் மகளிரை பெருமைப்படுத்தும் வகையில் மகளிர் தினம் கொண்டாடப்படும் நிலையில், பெண்களுக்கு கண்ணியமான, கவுரவமான வாழ்க்கையையும், பொதுவெளியில் அச்சமின்றி, சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமையை வென்றெடுத்துத்தர வேண்டியது ஒட்டுமொத்த சமூகத்தின் உரிமையாகும் என்று கூறியுள்ளார்.
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலரும், பிரபலங்களும் மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
மற்றவர் நலம் காத்து, மனம் தளராது மடியும் வரை மற்றவர்களின் மகிழ்ச்சியாக வாழ மண்ணில் படைக்கப்பட்ட மாமணிகளான மாதருக்கு ‘குற்றம் குற்றமே’ சார்பில் மனமார்ந்த மகளிர் தின வாழ்த்துகள்!





