மனைவி இறந்ததால் இரு குழந்தைகளை அறையில் அடைத்து பட்டினி போட்ட இரண்டாவது மனைவி..!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் வேலை செய்து வரும் தமிழக தம்பதி இரண்டு சிறுவர்களை வீட்டிற்குள் பூட்டி வைத்து பல மாதங்களாக உணவளிக்காமல் சித்திரவதை செய்த கொடூரம் அம்பலமாகியுள்ளது. மலப்புரம் மாவட்டம் மாங்காட்டில் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டு இரண்டு சிறுவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் வந்த காவல்துறையினர் ஊர் மக்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்றபோது எலும்பும் தோலுமாக இருந்த இரண்டு சிறுவர்கள் அறைக்குள் பூட்டி வைக்கப்பட்டு இருந்ததை கண்டு அறிந்துள்ளனர். அவர்களை காவல்துறையினர் பிஸ்கட் பால் போன்ற உணவுகளை வழங்கி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர்.
நான்கு மற்றும் ஆறு வயதாகும் இரு சிறுவர்களும் தங்கராஜ் என்பவரின் முதல் மனைவிக்கு பிறந்த குழந்தைகள் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. முதல் மனைவி இறந்த பிறகு மாரியம்மாளை திருமணம் செய்ததாகவும் இருவரும் குழந்தைகளை அடித்து துன்புறுத்தி பல மாதங்களாக பட்டினி போட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தங்களை கொடுமைப்படுத்திய தந்தை மற்றும் சித்தியுடன் போக விருப்பம் இல்லை என்று இரு குழந்தைகளும் அச்சத்துடன் தெரிவித்தனர். குழந்தைகளை கொடுமைப்படுத்திய தங்கராஜ் மாரியம்மாள் தம்பதி கைது செய்யப்பட்டனர்.






