திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு..!
ஜனவரி 11ஆம் தேதி வரை திரையரங்குகளில் 50 சதவித இருக்கைகளுடன் இயங்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகள் அனுமதிப்பது தொடர்பாக தமிழக அரசு பதில் கூறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு அனுமதி வழங்கிய அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தது. அதனை ரத்து செய்து உத்தரவிட கோரி மனு தாக்கல் செய்தனர். அதில் மத்திய அரசு உத்தரவை மாநில அரசு மீறும் வகையில் அரசாணை வெளியிட்டு உள்ளதாகவும் இது பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் திரையரங்கு உரிமையாளர் சங்கம் தரப்பில் தங்களையும் எதிர் மனுதாரராக சேர்க்க கூறப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையில் கடந்த மார்ச் மாதம் முதல் திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் நிலையில் 50% இருக்கைகளுடன் இயங்கினால் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்று திரையரங்கு உரிமையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து 50 விழுக்காடு இருக்கைகளுடன் இயங்கும் பட்சத்தில் காட்சிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் திரையரங்குகளில் 100 விழுக்காடு இருக்கைகள் அனுமதிப்பது தொடர்பாக பதில் கூற உத்தரவிட்ட நீதிபதிகள் தமிழக அரசு இந்த விவகாரத்தை சரியான முறையில் மறுபரிசீலனை செய்து உரிய முடிவு எடுக்கும் என்று நீதிமன்றம் நம்புவதாக தெரிவித்தார்.
அதே சமயம் 50 சதவீத இருக்கைகளுடன் திரையரங்குகளில் காட்சிகளை அதிகப்படுத்துவது குறித்தும் தகவல் பெற்று ஜனவரி 11 இல் தெரிவிக்க வேண்டுமென்றும் அதுவரை திரையரங்குகள் 50 விழுக்காடு இருக்கைகள் உடனே இயங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.






