போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்..!
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடங்கி ஒரு மாதம் ஆகிறது.
இதற்கு நடுவே மத்திய அரசுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களிடம் காணொளி மூலம் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர் விவசாயிகள் சில கோரிக்கைகளுடன் டெல்லிக்கு போராட வந்தனர் என்றும் ஆனால் சிலர் அரசியல் ஆதாயத்திற்காக அவர்களை திசை திருப்புவதாக குற்றம்சாட்டினார்.
வேளாண் போராட்டத்தை வைத்து அரசியல் செய்யும் எதிர்க்கட்சிகள் அது குறித்து பொய் பரப்புரைகளையும், கட்டுக்கதைகளையும் பரப்புவதாக பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். மத்திய அரசு விவசாயிகளிடம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







