நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி..!
நடிகர் ரஜினிகாந்திற்கு ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஹைதராபாத்தில் அண்ணாத்த படக்குழுவினர் சிலருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று பாதிப்பு இல்லை என தெரிய வந்தது. இருந்தபோதிலும் அவர் ஹைதராபாத்தில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் ரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்பட்டதால் இன்று காலையில் அங்கு உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நடிகர் ரஜினிகாந்திற்கு கொரொனா பாதிப்பிற்கான அறிகுறிகள் இல்லை என்றும் ரத்த அழுத்த மாறுபாடு உள்ளதால் அதற்கு சிகிச்சை அளிக்க இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ரத்த அழுத்தம் சீராகும் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் ரஜினிகாந்த் இருப்பார் என்று மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. ஹைதராபாத் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் ஆவார் என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.







