ஊருக்கு தான் உபதேசம்…எங்களுக்கு இல்லை…காரமடை வனச்சரக அலுவலகத்திலேயே மரம் வெட்டப்பட்ட கொடுமை !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை வனச்சரக அலுவலகத்திலேயே வளர்ந்த டெலோனக்ஸ் ரெஜியா என்ற நெருப்பு மரம் வெட்டப்பட்ட கொடூரம் குறித்து வன ஆர்வலர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள காரமடை வனச்சரக பகுதிகளில் யானை,சிறுத்தை,காட்டெருமை,மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வன விலங்குகள் வசித்து வருகின்றன.வனச்சரக அலுவலகம் காரமடை – தோலம்பாளையம் செல்லும் சாலையில் ரயில்வே கேட் அருகே செயல்பட்டு வருகிறது.இந்த அலுவலகத்தின் முன்னால் அழகுக்காக வளர்க்கப்படும் டெலோனக்ஸ் ரெஜியா எனும் தாவரவியல் பெயர் கொண்ட நெருப்பு மரம் இருந்தது.
முதலில் இம்மரத்தை பற்றி அறிவோம்.கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு அலங்கரிக்கும் பிரகாசமான சிவப்பு பூக்களுக்கு பூக்கும் தாவரத்தின் பெயர் இது. 10 மீட்டர் உயரமுள்ள ஒரு மரத்தில் ஒரு அழகிய தண்டு மற்றும் பரவும் கிரீடம் உள்ளது. அவற்றின் கிளைகள் தரையில் இணையாக வளர்கின்றன.இது தாவரத்தை குடையாக தோற்றமளிக்கிறது.அந்தளவிற்கு அழகான மரம் அது.காண்போர் மனதை கொள்ளை கொள்ளும் திறனுடையது.
இந்த நிலையில் மரம் நடுவோம்.மழை பெறுவோம்.மழை நீர்,உயிர் நீர் என்றெல்லாம் ஊருக்கெல்லாம் உபதேசம் செய்யும் வனத்துறை அலுவலத்திலேயே இம்மரம் வெட்டப்பட்டது வன ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நீதிமன்றமே ஒரு மரத்தை வெட்டினால் அதற்கு பதிலாக பல மரங்களை நட வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில் இச்சம்பவம் ஊருக்கு தான் உபதேசம்…எங்களுக்கில்லை என்பது போல் உள்ளது.
இதுகுறித்து வனச்சரகர் மனோகரன் கூறுகையில் இம்மரமானது பல கிளைகளை கொண்டு அகண்டு இருந்ததாகவும்,இதனால் அலுவலத்தினுள் வெளிச்சம் வரவில்லை.அலுவலகம் இப்பகுதியில் செயல்படுவது மக்களுக்கு தெரிவதில்லை.மேலும்,மரத்தின் வேர் அலுவலகம் முழுவதும் பரவி விட்டது எனவும்,பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் உள்ளதாலும்,மரத்தின் தண்டுப்பகுதியில் துளை விழுந்துள்ளதாகவும்,கட்டிடத்தை சேதப்படுத்தியதால் மரத்தை வெட்டியதாகவும் பொறுப்பில்லாமல் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசும்,பல்வேறு தனியார் அமைப்புகளும் பல்வேறு வகைகளில் மரம் நடுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வினை ஏற்படுத்தி வரும் நிலையில் வனச்சரக அலுவலகத்தில் வெளிச்சம் தெரிவதில்லை என்பதற்காக மரத்தை வெட்டியது வன ஆர்வலர்களிடையே பெரும் கொந்தளிப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் மரங்களை வேரோடு பிடுங்கி மற்றுமொரு இடத்தில் நடப்படும் அளவிற்கு அறிவியல் பூர்வமாக பல்வேறு தொழில்நுட்பங்கள் தற்போது வந்து விட்ட நிலையில் மரத்தை முழுவதுமாக வெட்டுவது எவ்வகையில் நியாயம் ? எனவும்,அப்படியே பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியிருந்தாலும் கிளைகளை மட்டுமாவது வெட்டியிருக்கலாம் எனவும் வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பதே வன ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.செய்வாரா மாவட்ட வன அலுவலர் ?







