மேட்டுப்பாளையம் : வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக 15 இளைஞர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் !!!
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள குன்னூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் சிறுத்தை,யானை,காட்டெருமை,மான் உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.இந்த நிலையில் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்குட்பட்ட வனப்பகுதிக்குள் இளைஞர்கள் சிலர் அத்துமீறி நுழைந்துள்ளதாக வனச்சரகர் பழனிராஜாவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
அதனடிப்படையில் வனச்சரகர் பழனிராஜா தலைமையிலான வனத்துறையினர் குன்னூர் சாலையில் உள்ள வனப்பகுதிக்குள் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.அப்போது,அப்பகுதியில் 15 இளைஞர்கள் தங்களது டூவீலரில் உதகைக்கு செல்லும் வழியில் உள்ள குன்னூர் சாலை வனப்பகுதிக்குள் தங்களது வாகனத்தை நிறுத்தி விட்டு அத்துமீறி நுழைந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அவர்களை மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலகத்திற்கு அழைத்து வந்ம வனச்சரகர் வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம் என இளைஞர்களை கடுமையாக எச்சரித்ததுடன் இளைஞர்கள் 15 பேருக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.15 ஆயிரம் விதித்தார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய வனச்சரகர் பழனிராஜா வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைவது குற்றம்.அதனையும் மீறி வனப்பகுதிக்குள் நுழைபவர்கள் மீது வனப்பாதுகாப்புச்சட்டத்தின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கடுமையாக எச்சரித்துள்ளார்.இச்சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






