கை முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற்ற சிறுமி மர்ம மரணம். முத்தூஸ் மருத்துவமனையின் தவறான சிகிச்சையால் தான் சிறுமி உயிரிழந்ததாக புகார் !!!
கோவை கை முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற வந்த மூன்றரை வயது சிறுமி மருத்துவமனையில் அளித்த தவறான சிகிச்சையால் இறந்த சம்பவம் கோவை நகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(30). இவர் அனுப்பர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு திவ்யபாரதி என்ற மனைவியும் ஹரிணி(6), பிரியதர்ஷினி( 3 1/2 )என்ற 2 மகள்கள் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை காலை வீட்டில் கழிவறைக்குச் செல்லும் படியில் ஏறும் பொழுது ராமகிருஷ்ணனின் இரண்டாவது குழந்தை பிரியதர்ஷினி தடுமாறிக்கீழே விழுந்ததில் இடது கை முட்டியில் காயம் ஏற்பட்டது.இதனால் இடது கை வீங்கி காணப்பட்டது.
இதையடுத்து பிரியதர்ஷினியை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இரண்டு நாட்கள் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கையில் ஆபரேஷன் செய்வதற்கு வசதிகள் இல்லை என்றும், மேல்சிகிச்சைக்காக கோவைக்கு செல்லுங்கள் என்றும் மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள்.

இதனையடுத்து மேல் சிகிச்சைக்காக கோவை சரவணம்பட்டியில் உள்ள டாக்டர் முத்தூஸ் மருத்துவமனையில் நேற்று முன்தினம் மதியம் 2 மணிக்கு பிரியதர்ஷினியை அவரது பெற்றோர்கள் அழைத்து வந்து சிகிச்சைக்காக சேர்த்தார்கள்.
பிரியதர்ஷினியை பரிசோதித்து பார்த்த டாக்டர்கள் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று முன்தினம் மாலை மருத்துவமனையில் ஆபரேஷன் செய்துள்ளார்கள். ஆப்ரேஷன் செய்த பிறகு இரவு 10:50 மணிக்கு பிரியதர்ஷினி இறந்துவிட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். இதனால் பிரியதர்ஷினியின் பெற்றோர்கள் செய்வதறியாமல் கதறி அழுதுள்ளனர்.
கையில் ஏற்பட்ட காயத்திற்கு எப்படி உயிர் போகும் என்று மருத்துவமனை நிர்வாகத்தினருடன் வாக்குவாதம் செய்துள்ளனர்.மேலும், குழந்தைக்கு உரிய முறையில் சிகிச்சையளிக்காத காரணத்தால் தான் குழந்தை இறந்துள்ளது எனவும் மருத்துவமனை நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டுள்ளனர்.
இதனையடுத்து ராமகிருஷ்ணனின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 50 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் குவிந்தனர். இதுகுறித்து தகவலறிந்த சரவணம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.தொடர்ந்து ராமகிருஷ்ணன் பிரியதர்ஷினிக்கு முத்தூஸ் மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த தவறான சிகிச்சையால் தான் இறந்துவிட்டதாகவும், முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்துள்ளனர்.
பின்னர், பிரியதர்ஷினியின் உடலை கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். அங்கும் 50 க்கும் மேற்பட்டோர் குவிந்தனர். பிரேத பரிசோதனை முடிந்தபின்னர் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதுகுறித்து இறந்த பிரியதர்சினியின் பெற்றோர் கூறும் பொழுது மருத்துவமனைக்கு சேர்க்கும் பொழுது குழந்தை நன்றாக இருந்தது என்றும், ஆபரேஷனுக்கு செல்லும் மாலை 5 மணி வரையில் எங்களுடன் சாதாரணமாக சகஜமாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, அதுவும் கையில் ஏற்பட்ட சிறு காயத்திற்கு உயிர் போகும் அளவிற்கு நடக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கவில்லை என்றார்.
ஆபரேஷன் முடிந்த பிறகு குழந்தையின் இருதயம் வேலை செய்யவில்லை என்று கூறினர். நுரையீரல் சுருங்கி உள்ளதால் இருதயம் வேலை செய்யாமல் இருப்பதாகவும்,சிறிது நேரத்தில் சரியாகி விடும் என்றும்,முதலில் கூறியவர்கள் பின்னர் காப்பாற்ற முடியவில்லை என்று கூறினார்கள். தவறான சிகிச்சையால் தான் எங்களது குழந்தையை இப்போது பறிகொடுத்து நிற்கிறோம் என்று கண்ணீர் மல்க கூறினர்.
கோவை நகரில் கை முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற வந்த மூன்றரை வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






