தந்தை தொடங்கிய கட்சிக்கும், தனக்கும் சம்பந்தம் இல்லை எனக்கூறும் நடிகர் விஜய்..!
தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கியுள்ள கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தந்தை தொடங்கியிருக்கும் கட்சியில் ரசிகர்கள் இணைய வேண்டாம் என்றும் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நடிகர் விஜய் தரப்பில் அரசியல் கட்சியை பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்ததாக தகவல்கள் வெளியாகின. அந்த விண்ணப்பத்தில் பொதுச்செயலாளராக சந்திரசேகர், பொருளாளராக தாய் சோபனாவின் பெயர் இடம் பெற்றிருந்தது.
இதனால் விஜய் விரைவில் அரசியல் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்ப்பு எழுந்தது. இந்நிலையில் விஜய் தரப்பில் அரசியல் கட்சியை பதிவு செய்யவில்லை என்றும், தனது தனிப்பட்ட முயற்சி காரணமாகவே அரசியல் கட்சி பதிவுக்கான வேலைகள் நடந்ததாகவும் விஜய்யின் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் விளக்கமளித்தார்.
மேலும் இந்த இயக்கத்திற்கும், நடிகர் விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். எதிர்காலத்தில் இந்த இயக்கத்தில் நடிகர் விஜய் இணைவாரா என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்றும் சந்திரசேகர் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில் தந்தை எஸ்ஏ சந்திரசேகர் தொடங்கிய கட்சிக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.







