தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி சென்றுள்ளார்..!
பரபரப்பான அரசியல் சூழலுக்கு இடையே தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். இந்த பயணத்தின் போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆலோசிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையிலிருந்து காலை விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாலையில் பிரதமர் மோடியை சந்தித்து பேச உள்ளார். வரும் வெள்ளிக்கிழமை வரை ஆளுநர் பன்வாரிலால் டெல்லியில் தங்க உள்ளதாகவும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரையும் அவர் சந்திக்க இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் பாஜகவினர் வேல் யாத்திரைக்கு திட்டமிட்டிருக்கும் நிலையில் அண்மையில் அந்த கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் ஆளுநரை சந்தித்து இருந்தார். மேலும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதற்கு உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
அண்ணா பல்கலைக்கழக உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை என தமிழக அரசு கடிதம் எழுதி விவகாரம் குறித்தும் பிரதமர் மோடி சந்திப்பு ஆலோசிக்கப்படும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






