--- --:--:-- --

கொரோனா ஊரடங்கு : வங்கிக்கடன் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி.. முறையாக தவணை செலுத்தி யோருக்கு ஊக்கத்தொகை

11

கொரோனா ஊரடங்கின் போது வங்கிக் கடன் மீதான மாதாந்திர தவணை செலுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசு சலுகை அறிவித்தது. ஆனால் வங்கிகளோ தவணை செலுத்தாதவர்களுக்கு வட்டிக்கு வட்டி விதித்தது. இதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டதை தொடர்ந்து வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்தும், முறையாக மாதந்தோறும் தவணை செலுத்தியோருக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.

 

கொரோனா பரவலைத் தொடர்ந்து நாடு முழுவதும் கடந்த மார்ச் 25-ந் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தொழில்கள் அனைத்தும் முடங்கின. இதனால் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டது. மாதாந்திர சம்பளம் பெறுவோர் பற்றும் சிறு, குறுந்தொழில் செய்வோர் வங்கிகளில் வாங்கிய கடனுக்கு மாதாந்திர தவணை செலுத்த முடியாமல் தவிக்கும் நிலையும் ஏற்பட்டது.

 

இதையடுத்து மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்தது. அதில் கடந்த மார்ச் முதல் ஆகஸ்ட் வரை, 6 மாதங்களுக்கு வங்கிக் கடன் மீதான மாதாந்திர கடன் தவணைகளை செலுத்த, இந்திய ரிசர்வ் வங்கி கால அவகாசம் அளித்தது. ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் உள்ளிட்டவை வட்டிக்கு வட்டி விதித்தன.

 

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் வட்டிக்கு வட்டி விதிப்பது குறித்து மத்திய அரசை கடுமையாக சாடியதுடன், அதனை தள்ளுபடி செய்ய முடியாதா? என கேள்வி எழுப்பியது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில், ஒப்புக் கொண்டபடி, மாதாந்திர தவணை செலுத்தாத 6 மாத காலத்திற்கு கூட்டு வட்டியை தள்ளுபடி செய்வது தொடர்பான அறிவிப்பை மத்திய நிதியமைச்சகம் இன்று வெளியிட்டுள்ளது.

இதன்படி, தேசிய மற்றும் தனியார் உட்பட அனைத்து வங்கிகள், அனைத்து மாநில கூட்டுறவு வங்கிகள், மைக்ரோ பைனான்ஸ் உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், அனைத்து வீட்டுக்கடன் நிறுவனங்கள் ஆகியனவற்றில், கடன் பெற்றவர்களுக்கு, கடன் மீதான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

 

சிறு-குறு தொழில்களுக்கான கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், வாகன கடன், தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன், பொருட்கள் மீதான கடன், நுகர்வு கடன் ஆகிய வகைகளில், கடன் பெற்ற பயனாளிகளுக்கு மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31 வரையிலான காலக்கட்டத்தில், வட்டிக்கு வட்டி வசூலிக்கும் கூட்டு வட்டி முறை தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதேவேளையில், கடன் தவணையை செலுத்த சலுகை வழங்கப்பட்ட காலத்தில், முறையாக கடன் தவணை செலுத்தியவர்களுக்கு, கேஷ் பேக் என்ற அடிப்படையில், அவர்கள் செலுத்திய வட்டியில், குறிப்பிட்ட ஒரு தொகை, வங்கிக் கணக்கில், வரவு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அதாவது, 6 மாத தவணை செலுத்தியவர்களுக்கு, குறிப்பிட்ட காலத்திற்கான சாதாரண மற்றும் கூட்டு வட்டிக்கு இடையிலான வித்தியாசத்தை கணக்கிட்டு ஊக்கத் தொகையாக வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள் வசூலித்த வட்டிக்கு வட்டியை வரும் நவம்பர் 5-ந் தேதிக்குள் அவரவர் வங்கிக்கணக்கில் செலுத்தவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.மத் திய அரசின் இந்த உத்தரவால் வங்கிக் கடன் பெற்ற பலரும் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon